இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் மிக முக்கியமான விஷயத்தை பேசி இருக்கிறார்.
தற்போது இந்திய ஒரு நாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட முழுமையான உறுதியுடன் இல்லை என அகர்கர் தெரிவித்திருக்கிறார்.
பிரச்சனை ஆரம்பம்
இந்த நிலையில் எதற்காக இருவரையும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதே சமயத்தில் இருவரும் சரியாக விளையாடாவிட்டால் ஒன்று இரண்டு தொடரிலேயே அவர்களை நீக்கிவிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அஸ்வின் பேசும்பொழுது “ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தங்களுடைய பார்மை தொடர்ந்து எடுத்து வர வேண்டும். இதற்காக அவர்கள் இருவரையும் இந்திய ஏ அணியில் ஒருநாள் போட்டியில் விளையாட வைத்திருக்க வேண்டும். ஒருவேளை அவர்களுக்கு அந்த மாதிரியான போட்டியில் உந்துதல் கிடைக்காது என்றால் விஜய் ஹசாரே தொடரில் விளையாட வைக்க வேண்டும். அவர்கள் முடியாது என்று சொன்னால் விஷயம் தெளிவாகிவிடும். அவர்களை நீக்கவும் செய்யலாம்”
கில் வந்தது சரிதான்
“தற்போது இவர்கள் இருவரும் பழைய செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் அவர்கள் தொடர்ந்து 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இருப்பார்களா என்று தெரியாது. நீங்கள் இவ்வளவு சந்தேகத்தை வைத்துக்கொண்டு ஒரு உலகக் கோப்பைக்கு முன்னேற முடியாது. எனவே இதற்கு முடிவு காணப்பட வேண்டும்”
இதையும் படிங்க : தமிழக சாய் சுதர்சன் வாய்ப்பு முடிகிறதா?.. அவருக்கே அந்த உண்மை தெரியும் – இந்திய துணை பயிற்சியாளர் பேச்சு
“மிகப்பெரிய அனுபவம் உள்ள ரோகித் மற்றும் விராட்டை யாரும் தங்களுக்கு வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். இவர்களது அனுபவம் கடையில் கிடைக்காது. அதே சமயத்தில் புதிய கேப்டனாக கில் கொண்டுவரப்பட்டது நல்ல பகுத்தறிவான முடிவு. ஒருவேளை ரோகித் உடல் தகுதி மற்றும் பார்ம் இல்லாமல் போய்விட்டால், திடீரென புதிய கேப்டனை உருவாக்க முடியாது. எனவே இப்பொழுது சுதாரித்து விட்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.






