ஆண்டர்சன் பும்ராவிடம் பேசியது இது தான் – ரகசியத்தை உடைத்த ரவிச்சந்திரன் அஷ்வின்

0
5361
Jasprit Bumrah and Ashwin

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டி டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் டிராவில் முடிந்தது. இரண்டாம் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க அதில் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது. பொதுவாக இங்கிலாந்து அணி வீரர்கள் தான் அவர்களின் நாட்டுக்கு விளையாட வருபவர்களை உரசிப் பார்ப்பார்கள். ஆனால் இந்திய அணி வீரர்களோ இங்கிலாந்து வீரர்களே தயங்கும் அளவுக்கு அவர்களுக்கு இணையாக ஆக்ரோஷமாக செயல்பட்டனர்.

இறுதி நாளின் ஆரம்பத்தில் பேட்டிங் வீரர்கள் இந்திய அணியைக் கை விட்டாலும் பந்து வீச்சாளர்களான ஷமி மற்றும் பும்ரா இணைந்து இந்திய அணியை மீட்டனர். இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் ஒரு புறம் பேட்டிங்கில் மிரட்ட அதை இந்திய பந்து வீச்சாளர்கள் சமாளித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துப் போக என்று ஐந்து நாள் ஆட்டமும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

- Advertisement -
Jasprit Bumrah Test Cricket

ஆட்டத்தைக் கடந்து இந்த போட்டியில் அதிகம் பேசப்பட்டது பும்ரா மற்றும் ஆண்டர்சன் மோதிக் கொண்டது தான். இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சின் கடைசி விக்கெட்டுக்கு களம் இறங்கினார் ஆண்டர்சன். அவருக்கு வரிசையாக பவுன்சர்கள் வீசி அவுட் ஆக்கினார் பும்ரா. அவுட் ஆகி செல்லும் போது ஆண்டர்சன் பும்ராவிடம் ஏதோ கூறினார். பும்ரா பேட்டிங் ஆட வரும்போதும் இங்கிலாந்து வீரர்கள் ஏதோ கூற ஆட்டம் சூடு பிடித்தது.

இதன் பின்பு தான் ஒவ்வொரு இந்திய வீரரும் ஆக்ரோஷமாக ஆட ஆரம்பித்தனர். வீரர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஆர்ப்பரித்து அமர்க்களப்படுத்தினர். இது குறித்து தனது குட்டி ஸ்டோரி என்னும் யூடியூப் தொடரில் அஷ்வின் பேசும் போது களத்தில் என்ன நடந்தது என விவரித்தார். பும்ரா ஆண்டர்சனுக்கு பந்து வீச வரும் போது, “மற்ற வீரர்களுக்கு எல்லாம் 85 மைல் வீசும் போது எனக்கு மட்டும் 90 மைல் வேகத்தில் வீசுவது சரி இல்லை. இது ஏமாற்று வேலை” என்று சொன்னாராம் ஆண்டர்சன். 2014ம் ஆண்டு நடந்த இங்கிலாந்து தொடரிலும் ஜடேஜாவை நோக்கி இது போல் ஏதோ ஆண்டர்சன். கூறியதாக கூறினார் அஷ்வின்.