இப்படியும் ஒரு கிரிக்கெட் வீரரா.. வருத்தப்பட்ட கோச்சுக்கு வீடு வாங்கி தந்த ஆஷிஷ் நெஹ்ரா.. நெகிழ்ச்சி சம்பவம்

0
82

இந்திய அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களில் முக்கியமானவர் ஆஷிஷ் நெஹ்ரா. 2003ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வந்த இவர், தொடர் காயங்களால் கிரிக்கெட்டில் பின்னடைவை சந்தித்தார். ஆனால் ஒவ்வொரு முறை காயமடைந்த போதும், மீண்டும் ஃபிட்னஸ் உடன் கம்பேக் கொடுத்து அசரடிப்பார். அப்படிதான் சிஎஸ்கே அணிக்காக விளையாடி பலரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

அதன்பின் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய அவர், 2017ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின் தற்போது குஜராத் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஆஷிஷ் நெஹ்ரா சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த பயிற்சியாளர் என்பதை விடவும் சிறந்த மாணவராகவும் இருந்திருக்கிறார்.

- Advertisement -

தாமதமாக வந்த பயிற்சியாளர்:

டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் அடையாளமாக இருப்பது சோனட் கிரிக்கெட் கிளப். 1969ஆம் ஆண்டு சோனட் கிரிக்கெட் கிளப் டாரக் சின்ஹாவால் உருவாக்கப்பட்டது. இந்த கிரிக்கெட் கிளப்பில் விளையாடி தான் சேவாக், அஞ்சும் சோப்ரா, ஆகாஷ் சோப்ரா, ஷிகர் தவான், ரிஷப் பண்ட் உள்ளிட்ட பலரும் இந்திய அணிக்கு விளையாடி இருக்கின்றனர். இதே கிரிக்கெட் கிளப்பில் தான் ஆஷிஷ் நெஹ்ராவும் விளையாடினார்.

பயிற்சியாளர் டாரக் சின்ஹா எவ்வளவு கிரிக்கெட்டர்களை உருவாக்கினாலும், அவர் ஏழ்மையில் தான் வாழ்ந்து வந்திருக்கிறார். ஒருமுறை ஆஷிஷ் நெஹ்ரா பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, பயிற்சியாளர் சின்ஹா தாமதமாக வந்துள்ளார். அப்போது நெஹ்ரா, கோச்.. நீங்களே தாமதமாக வந்தால், எப்படி மாணவர்களுக்கு உங்களால் பயிற்சியளிக்க முடியும் என்று கிண்டல் செய்துள்ளார்.

- Advertisement -

அதற்கு டாரக் சின்ஹா, நீ இந்திய அணிக்காக விளையாடுகிறார்.. பெரிய பங்களாவில் வாழ்கிறாய்.. ஆனால் நான் அப்படியல்ல.. நான் சாதாரணமாக வாடகை வீட்டில் தான் வாழ்கிறேன். எனது வீட்டின் உரிமையாளர் 2 நாட்களில் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்துவிட்டார்.

இன்னும் 2 நாட்களில் வீட்டினை மாற்ற வேண்டும் என்பதால், வாடகைக்கு வீடு தேடி சென்றேன். அதுதான் தாமதமாகிவிட்டது என்று கூறி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அடுத்த 2 நாட்களும் மழைக் காரணமாக கிளப் மூடப்பட்டுள்ளது. இதன்பின் 3வது நாள் மீண்டும் கிளப் திறக்கப்பட்ட போது, இம்முறை ஆஷிஷ் நெஹ்ரா 3 மணி நேரம் தாமதமாக வந்திருக்கிறார்.

சர்ப்ரைஸ் தந்த நெஹ்ரா:

இதனை பார்த்த டாரக் சின்ஹா, எனக்கு அன்று அட்வைஸ் செய்தாய்.. உனக்கு இன்று என்னவானது என்று ஜாலியாக கேள்வி கேட்டார். அதற்கு எந்த பதிலையும் அளிக்காத நெஹ்ரா, பயிற்சியாளர் டாரக் சின்ஹாவின் கைகளில் சாவி ஒன்றை கொடுத்து சர்ப்ரைஸ் செய்துள்ளார். அவரின் பிரச்சனையில் இருந்து கொஞ்சம் காப்பதற்காகவே இந்த வீடு வாங்கி கொடுத்ததாகவும் கூறி இருக்கிறார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2001-2002 ஆகிய ஆண்டுகளில் இந்திய மகளிர் அணிக்கு டாரக் சின்ஹா பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு மத்திய அரசின் துரோனாச்சாரியா விருது அளிக்கப்பட்டது. எப்போதும் பயிற்சியாளர் டாரக் சின்ஹாவுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர் நெஹ்ரா. இறுதியாக 2021ஆம் ஆண்டு டாரக் சின்ஹா காலமானார்.

- Advertisement -