ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் அந்த நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று இரவு 9 மணிக்குத் தொடங்குவதாய் இருந்து, மழை குறுக்கீட்டால் இரவு 11.20 மணிக்கே தொடங்கியது.
இதனால் போட்டிக்கு 12 ஓவர்கள் எனவும், இரண்டு பவுலர்கள் அதிகபட்சமாக தலா மூன்று வீசிக்கொள்ளலாம் எனவும், பவர்-ப்ளே 4 ஓவர்கள் எனவும் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற ஹர்திக் பாண்ட்யா பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
ஆட்டத்தின் முதல் ஓவரில் அயர்லாந்து கேப்டன் ஆன்டி பால்போர்னியை புவனேஷ்வர் கிளீன் போல்ட் செய்தார். இரண்டாவது ஓவரில் அயர்லாந்தின் பிரபல அதிரடி வீரர் பால் ஸ்டிரிலிங்கை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும், மூன்றாவது ஓவரில் கேரத் டெலனியை ஆவேஷ்கானும் பெவிலியன் அனுப்பினார்கள்.
22 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் என்று நெருக்கடியில் விழுந்த அயர்லாந்து அணியை ஹாரி டெக்டர், லார்கேன் டக்கேர் ஜோடி 50 ரன் பார்ட்னர்ஷிப்பை அதிரடியாய் கொண்டுவந்து மீட்டது. இதில் லார்கேன் டக்கேரை 18 ரன்னில் சாஹல் ஆட்டத்தின் 9வது ஓவரில் வீழ்த்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஹாரி டெக்டர் 33 பந்துகளில் ஆறு பவுண்டரி, மூனு சிக்ஸர்களோடு 64 ரன்கள் குவித்து அசத்த, அயர்லாந்து அணி 12 ஓவர்களில் 108 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் மூன்று ஓவர்கள் வீசி 16 ரன்கள் தந்து ஒரு விக்கெட்டும், சாஹல் மூன்று ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே தந்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
அடுத்து 12 ஓவர்களில் 109 ரன்கள் என்ற இலக்கோடு, இந்தமுறை இஷான் கிஷானோடு தீபக் ஹூடா களமிறங்கினார்.முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸர் என அதிரடி காட்டிய இஷான் கிஷான் 11 பந்துகளில் மூன்று பவுண்டரி இரண்டு சிக்ஸர்களோடு 26 ரன்கள் அடித்து, யங் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ ஆகி அதிர்ச்சி அளித்தார்.
ஆனால் இதற்கடுத்து ஜோடி சேர்ந்த தீபக்ஹூடா கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி அதிரடியில் அயர்லாந்து பவுலர்களை மிரட்டியது. இருவரும் சேர்ந்து 64 ரன்களை 5 ஓவர்களில் குவித்தார்கள். இதில் ஹர்திக் பாண்ட்யா ஒரு பவுண்டரி, மூன்று சிக்ஸர்களோடு 12 பந்தில் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து தினேஷ் கார்த்திக் உள்ளே வர, இந்திய அணி 9.2 ஓவர்களில் எளிதாய் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. தீபக் ஹூடா 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் இருக்க தீபக் ஹூடாவை தேர்வு செய்ததிற்கான காரணம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெக்ரா சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். அதில் “இந்த முடிவு கடினமான ஒன்றல்ல. ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் இருவரும் ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஷ் ஐயரின் இடங்களுக்கு புதிதாய் வந்திருக்கிறார்கள். ஆனால் தீபக் ஹூடா முன்பே அணியில் இருக்கிறார். மேலும் வெங்கடேஷ் ஐயரும் இருக்கிறார். ராஜஸ்தானுக்கா ரஞ்சி போட்டிகள் மற்றும் ஐ.பி.எல் தொடர் இரண்டிலும் தொடர்ந்து சிறப்பாக தொடர்ந்து ரன் குவித்த வீரராக தீபக் ஹூடா இருந்தார். இந்தக் காரணங்களால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது” என்றார்!