டி20 உலககோப்பைக்கு செல்லும் இந்திய அணி; 2 முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு இடமில்லை – ஆஷிஷ் நெஹ்ரா தேர்வு!

0
8292

டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் இதுதான் என்று முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆசிஸ் நெஹ்ரா கணித்துள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இம்முறையும் கோப்பையை வெல்லும் என்று பலரும் கணிப்புகளை தெரிவித்து வந்த நிலையில் துரதிஷ்டவசமாக சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளிடம் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியது. ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய சோகத்தை, ஆப்கானிஸ்தான் அணியுடன் விராட் கோலி அடித்த 71வது சர்வதேச சதம் மற்றும் முதல் டி20 சதம் மறக்கடித்தது.

- Advertisement -

டி20 உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு இன்னும் சில வார காலங்கள் மட்டுமே இருக்கின்றன. அதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுடன் டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய வீரர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் ஒருபுறமிருக்க, டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பற்றி பலரும் தங்களது கருத்துக்களை மற்றும் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதற்கிடையில் பிசிசிஐ, டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை தயார் செய்வதில் முழு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. அநேகமாக செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் இந்திய வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுவிடும் என தெரிகிறது.

அதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆசிஸ் நெஹ்ரா, டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் உத்தேச இந்திய அணியின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார். இதில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக தீபக் சகர் மற்றும் முகமது சமி இருவருக்கும் இடம் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக இளம் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷதிப் சிங் மற்றும் தீபக் ஹூடா இருவருக்கும் இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் இருக்கின்றனர். கே எல் ராகுல் வருகிற தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடுவார் என்றும் ஆசிஸ் நெஹ்ரா கணித்துள்ளார். மிடில் ஆர்டரில் விராட் கோலி, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு இடம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தினேஷ் கார்த்திக்கை தனது அணியில் இணைத்து இருக்கிறார். ஆல் ரவுண்டர்களை பொருத்தவரை சுழல் பந்துவீச்சில் ஒரு ஆல்ரவுண்டர் மற்றும் வேகப்பந்து வீச்சில் ஒரு ஆல்ரவுண்டர் என்று கலவையாக எடுத்திருக்கிறார். ஹர்திக் பாண்டியா மற்றும் தீபக் ஹூடா இருவரும் அதில் இருக்கின்றனர்.

சுழல் பந்துவீச்சை பொறுத்தவரை ஜடேஜா, சகல் மற்றும் அஸ்வின் ஆகியோரை இணைத்துள்ளார். ஆஷிஷ் நெஹ்ரா இந்த அணியில் அஸ்வின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருப்பார் என்று குறிப்பிட்டு பேசினார். கூடுதல் சுழல் பந்துவீச்சாக தீபக் ஹூடா அணியில் இருக்கிறார். வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா, ஹர்ஷல் பட்டேல், புவனேஸ்வர் குமார் மற்றும் இளம் வீரர் அர்ஷதீப் சிங் ஆகியோர் இடம் பெற்று இருக்கின்றனர். இவர்களுடன் கூடுதல் வேகப்பந்துவீச்சாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இருக்கிறார்.

இவரது அணியில் முகமது சாமி இல்லாதது குறித்து சில விமர்சனங்களை சந்தித்தார். அது பற்றி பேசிய ஆஷிஷ் நெஹ்ரா, முகமது சமி டெஸ்ட் போட்டிகளில் செயல்பட்ட அளவிற்கு டி20 போட்டிகளில் தேர்வுக் குழுவினரை பெரிதாக ஈர்க்கவில்லை. அதனால் தான் அவரை இந்த அணியில் நான் எடுக்கவில்லை. அவருடன் சேர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணியில் நான் பணியாற்றி இருக்கிறேன் என்பதால் எனக்கு அவரது முக்கியத்துவம் புரியும். ஆனால் தேர்வு குழுவினர் பார்வையில் நான் இந்த அணியை தேர்வு செய்து இருக்கிறேன்.” என்றார்.

ஆஷிஷ் நெஹ்ரா தேர்வு செய்த 2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:- (ஐசிசி இணையதளத்தில்)

ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல், சூர்யகுமார், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவி அஷ்வின், சஹல், தினேஷ் கார்த்திக், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், தீபக் ஹூடா.