ஆஷஸ் 2025-26 தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியாவின் 15 பேர் கொண்ட அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதல் இரண்டு டெஸ்ட்களுக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வரும் 32 வயதான் கம்மின்ஸ், தற்போதைய ஆஷஸ் தொடரில் விளையாடவில்லை.
2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியில் தற்போது அவர் இணைந்திருப்பதால், ஆஸ்திரேலிய அணி மிருகப்பலம் அடைந்துள்ளது. கம்மின்ஸ் இல்லாத போதும் முதல் இரண்டு டெஸ்ட்களிலும் இங்கிலாந்தை ஆஸ்திரேலியா நசுக்கியே தள்ளியது. முதல் டெஸ்ட்டை இரண்டே நாட்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
கம்மின்ஸ் திரும்பினார்:
பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டையும் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட்டில் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், நேதன் லயன் ஆகிய மூத்த பந்துவீச்சு இல்லை. இருந்தும் மிட்செல் ஸ்டார்க் தனி ஆளாக 8 விக்கெட்டுகளும், பேட்டிங்கில் 77 ரன்களும் எடுத்து தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்றார்.
மூத்த வீரர்கள் மூவரும் இல்லாத இடத்தில் மைக்கேல் நேசர் அவர்கள் இடத்தை பூர்த்தி செய்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினார். மூன்றாவது டெஸ்ட்டில் வென்றாலோ அல்லது டிரா செய்தாலோ ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியாவிடமே தங்கிவிடும். 3ஆம் போட்டி டிசம்பர் 17 முதல் அடிலெய்டில் நடக்கிறது.
ஆஸி அணி விவரம்:
மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், நாதன் லயன், மைக்கேல் நேசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், போ வெப்ஸ்டர்.
இதையும் படிங்க: இனி தயவு செய்து இந்த வீரரை மட்டும் அணியிலிருந்து நீக்காதீங்க.. 26 வயது வீரரை பாராட்டிய அஸ்வின்
இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், “கம்மின்ஸ் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக உடல் தகுதியில் முன்னேறிவிட்டார். பிரிஸ்பேனில் விளையாட வைப்பதா வேண்டாமா என நிறைய விவாதம் நடந்தது. இப்போது அவர் இன்னும் முன்னேறியிருப்பதால், அடிலெய்ட் சவால்களுக்கு மிகச் சிறப்பாகத் தயாராக இருப்பார் என்று நம்புகிறோம்,” என்றார்






