இங்கிலாந்து கிரிக்கெட்டின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஜோ ரூட், தனது 41வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2025-26 ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று, அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இது 2026 ஆம் ஆண்டின் அவரது முதல் சர்வதேச சதம் ஆகும்.
இந்த சதத்தின் மூலம், ரூட் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் 41 டெஸ்ட் சதங்கள் என்ற சாதனையை சமன் செய்துள்ளார். பாண்டிங் தனது 17 ஆண்டுகால டெஸ்ட் வாழ்க்கையில் 168 போட்டிகளில் 41 டெஸ்ட் சதங்களைப் பெற்றிருந்தார். ஜோ ரூட், 2012 டிசம்பர் 13 அன்று நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி, தனது 163வது டெஸ்ட் போட்டியிலேயே இந்த மைல்கல்லை எட்டினார்.
ஜோ ரூட் சாதனை:
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜோ ரூட், 146 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸின் 60வது ஓவரில், மைக்கேல் நெசர் வீசிய முதல் பந்தில் இரண்டு ரன்கள் ஓடியதன் மூலம் அவர் 100 ரன்களைக் கடந்தார். ஆஸ்திரேலிய மண்ணில் ரூட் அடித்த இரண்டாவது டெஸ்ட் சதம் இது.
தற்போதைய ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டுக்குப் பிறகு இரண்டு சதங்களை அடித்த இரண்டாவது பேட்ஸ்மேன் ரூட் ஆவார். இத்தொடருக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் சர்வதேச சதம் அடிக்காத ரூட், தற்போது ஐந்து போட்டிகளில் இரண்டு சதங்களை விளாசி தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். இந்த இன்னிங்சில் 11 பவுண்டரிகளை அடித்திருந்தார்.
அதிக சதம் அடித்தவர்கள் பட்டியல்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்களின் ஒட்டுமொத்த பட்டியலில், இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 200 போட்டிகள், 51 சதங்கள் உடன் முதலிடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் 166 போட்டிகள், 45 சதங்கள் உடன் அவரைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
இந்த பட்டியலில், ஜோ ரூட் 163* போட்டிகள், 41 சதம் மற்றும் ரிக்கி பாண்டிங் 168 போட்டிகள், 41 சதம் ஆகியோர் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர். இலங்கை அணியின் குமார் சங்கக்காரா 134 டெஸ்ட் போட்டிகளில் 38 சதங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க: என் மைதானத்தில் இன்னொரு முறை நீ இதை செய்ய வேண்டாம்னு தோனி எச்சரித்தார்.. திகைத்துப் போனேன் – பிராவோ பகிரும் அனுபவம்
இந்த சதம் மூலம் ஜோ ரூட், ஹெர்பர்ட் சட்க்ளிஃபை முந்தி ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் நான்காவது அதிக ரன் குவித்தவர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். ரூட்டை விட ஜாக் ஹோப்ஸ் 3636 ரன்கள், டேவிட் கோவர் 3037 ரன்கள் மற்றும் வாலி ஹம்மண்ட் 2852 ரன்கள் மட்டுமே ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்துள்ளனர்.






