ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருபவர் அர்ஜுன் டெண்டுல்கர். ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை அணி வாங்கிய நிலையில், இந்த சீசனில் அவருக்கு இதுவரை விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் சிறந்த ஸ்விங் பவுலராவார்.
கடந்த சில சீசன்களாக கோவா அணிக்காக விளையாடி வந்த அர்ஜுன் டெண்டுல்கர், அடுத்த சீசனில் மும்பை அணிக்காக களமிறங்க உள்ளார். அதற்கு யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கே காரணம் என்று பார்க்கப்படுகிறது. சமீப காலமாக யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கிடம் அர்ஜுன் டெண்டுல்கர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
அடுத்த கிறிஸ் கெய்ல்
இந்த நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர், இந்தியாவின் கிறிஸ் கெய்லாக வலம் வருவார் என்று யோக்ராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக யோக்ராஜ் சிங் பேசும் போது, அர்ஜுன் டெண்டுல்கருக்கு பவுலிங்கை குறைவாகவும், பேட்டிங்கில் தீவிரமாகவும் பயிற்சி அளித்து வருகிறேன். யுவராஜ் சிங் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
தற்போது 3 மாதங்களாக சச்சினின் மகன் என்னிடம் இருக்கிறார். அவர் நிச்சயமாக அடுத்த கிறிஸ் கெய்லாக வருவார் என்பதற்கு நான் உறுதி கூறுகிறேன். வேகப்பந்துவீச்சாளராக இருந்ததால், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அர்ஜுன் டெண்டுல்கரால் அவ்வளவு சிறப்பாக பவுலிங் செய்ய முடியாது. இன்னும் சில வாரங்கள் யுவராஜ் சிங்கிடம் பயிற்சிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளேன்.
பொறாமையால் மாறிவிடும்
அபிஷேக் சர்மாவை முதல்முறையாக பார்த்த போது, பலரும் அவரை பவுலர் என்று கூறினார்கள். ஆனால் யுவராஜ் சிங் பேட்டிங் சாதனைகளை தான் பார்த்தார். அப்போது அபிஷேக் சர்மா 24 சதங்களை விளாசி இருந்தார். இந்த சம்பவம் 7 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்போது தவறான தகவல் அளித்ததற்காக யுவராஜ் சிங் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார்.
சில நேரங்களில் பொறாமையால் கூட சில வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதாலேயே அர்ஜுன் டெண்டுல்கருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து வருவதாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் யோக்ராஜ் சிங் அர்ஜுன் டெண்டுல்கரை தயார் செய்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.






