அர்ஸ்தீப் சிங் அசத்தல் பந்துவீச்சு ; பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!

0
549
T20iwc2022

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 22ஆம் தேதி ஆரம்பிக்கும் டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றிருக்கிறது!

இங்கிருந்து கிளம்பிய இந்திய அணி நேராக மேற்கு ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் முகாமிட்டுள்ளது. நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்காக இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணியுடன் இரண்டு பயிற்சிப் போட்டிகள் தரப்பட்டு இருக்கிறது.

ஆனால் இதற்கு முன்னதாக பெர்த் மைதானத்தில் முகாமிட்டுள்ள இந்திய அணி மேற்கு ஆஸ்திரேலிய லெவன் உடன் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஒப்பந்தம் செய்திருந்தது.

இதன்படி இன்று ஆஸ்திரேலியா உடன் முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி மோதியது. இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா 3 ரன்களிலும், ரிஷப் பண்ட் 9 ரன்களிலும், தீபக் ஹூடா 22 ரன்களிலும் வெளியேறினார்கள். அடுத்து ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சூரியகுமார் யாதவ் 32 பந்துகளில் 52 ரன்களை தலா 3 பவுண்டரி 3 சிக்சருடன் அடித்தார். ஹர்திக் பாண்டியா 20 பந்தில் 29 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் வந்த தினேஷ் கார்த்திக் 18 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய மேற்கு ஆஸ்திரேலிய அணி முதல் நான்கு விக்கெட்டுகளை புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஸ்தீப் சிங்கிடம் இழந்துவிட்டது. இதற்கடுத்து பவர் பிளே முடிந்து பந்துவீச வந்த சாகல் 5 ஆவது விக்கெட்டை கைப்பற்றினார்.

இதற்குப் பிறகு விளையாடிய மேற்கு ஆஸ்திரேலியா அணி ஓரளவுக்கு போட்டி அளிக்க ஆரம்பித்தது. அந்த அணிக்கு 5 ஓவர்களில் வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி 3 ஓவர்களில் 44 ரன்கள் தேவைப்பட்டன. இப்பொழுது ஓவர் வீச வந்த அர்ஸ்தீப், மிகச் சிறப்பாக விளையாடி 59 ரன்கள் சேர்த்து இருந்த சாம் பானிங் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த ஓவரிலும் அடுத்த ஓவரில் சேர்த்து மொத்தம் 8 ரன்கள் மட்டுமே வந்தது.

இதையடுத்து கடைசி ஓவரில் மேற்கு ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரில் அந்த அணி 18 ரன்கள் எடுக்க இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பவர் பிளேவில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஸ்தீப் கடைசி கட்ட ஓவரில் வந்தும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினார்!