இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியோடு சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே அஸ்வின் விடைபெற்ற விதம் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்.
ஓய்வு முடிவை அறிவித்த அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர டெஸ்ட் சுழல் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் வீழ்த்தி தற்காலத்தில் மிகச் சிறந்த ஜாம்பவானாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு போதுமானதாக அமையவில்லை. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அஸ்வின் தனது ஓய்வினை அறிவித்தார்.
இது தற்போது இந்திய முன்னாள் சுழல் பந்து ஜாம்பவான் கும்ப்ளே இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பல பெரிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் நியாயமான பிரியாவிடை பெற தவறி வருகின்றனர். இது அஸ்வின் விஷயத்திலும் அதுபோலவே நடந்திருக்கும் நிலையில் தனது அதிருப்தியை கும்ப்ளே தெரிவித்து இருக்கிறார். எனவே இனிவரும் காலங்களில் அது போல நிகழக்கூடாது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பிசிசிஐ மீது கும்ப்ளே ஏமாற்றம்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நீண்ட காலமாக இந்திய அணியில் பங்காற்றிய பெரிய வீரர்கள் ஒரு பெரிய பிரியா விடைக்கு தகுதியானவர்கள். அவர்கள் விளையாடி வரும் நேரத்தில் பிசிசிஐ அவர்கள் எப்படி விடை பெற வேண்டும் என்று ஒரு தகுந்த திட்டத்தை வழங்க வேண்டும். ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியேறிய விதத்தில் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். இது இப்போது மட்டும் நடைபெறவில்லை கடந்த காலத்திலும் பல பெரிய கிரிக்கெட் வீரர்கள் இது போன்ற பிரியா விடைகளை பெற தவறி விட்டனர்.
இதையும் படிங்க:சிட்னியில் அந்த வரலாறு திரும்ப போகிறது.. ஆஸி அந்த விஷயத்தில் கை வைக்கும் – இர்பான் பதான் கருத்து
அவர்கள் நிர்ணயித்த அளவுகோல்களை யாரும் எளிதாக அடையவோ வாழவோ முடியாது. அஸ்வின் இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு சிறப்பான சேவையை ஆற்றி இருக்கிறார். அவருக்கு தகுந்த பிரியாவிடை வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இனிவரும் காலங்களிலாவது இதுபோல நிகழாமல் இருக்க வேண்டும்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் இது போன்ற பிரியாவிடைகளை தான் விரும்புவதில்லை என்று சில நாட்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.






