ஆஸ்திரேலியா தொடருக்கு பிசிசிஐ தற்பொழுது எடுத்திருக்கும் ஒரு புதிய முடிவு நமக்கு மிகவும் ஆச்சரியமாக இருப்பதாகவும் அது சரி வராது எனவும் இந்திய ஜாம்பவான் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கூறியிருக்கிறார்.
இந்திய அணி இந்த மாதம் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த காரணத்தினால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு எதிர்பார்ப்புகள் பல மடங்காக மாறி இருக்கிறது.
பிசிசிஐ எடுத்த ஆச்சரியமான முடிவு
இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று அந்த அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றிருக்கும் இந்திய ஏ அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் விளையாடுவதாக திட்டம் தீட்டப்பட்டு இருந்தது. ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி இந்த திட்டத்தை மாற்றும் கட்டாயத்தை உருவாக்கி விட்டது.
தற்போது இந்திய அணி இந்திய ஏ அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் பயிற்சி போட்டியில் விளையாடாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதை உறுதிப்படுத்தி கூறியும் இருக்கிறார். இதற்கு கவாஸ்கர் கும்ப்ளே போன்ற முன்னாள் வீரர்கள் எதிர்ப்புதெரிவித்து வருகிறார்கள்.
பிசிசிஐ முடிவு ஆச்சரியம் அளிக்கிறது
இது குறித்து அனில் கும்ப்ளே கூறும் பொழுது “ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக இந்திய அணிக்கு பயிற்சி போட்டி இல்லை என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் வலையில் எவ்வளவு பயிற்சி செய்தாலும் பயிற்சி போட்டியில் களம் இறங்கி விளையாடுவது போல வராது.பயிற்சி போட்டியில் பந்துவீச்சாளர்களை சந்திப்பது மிகவும் வித்தியாசமானது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க :
இதற்கு விளக்கம் அளித்து இருந்த ரோஹித் சர்மா பயிற்சி போட்டியில் விளையாடும் பொழுது ஒரு வீரர் ஆட்டம் இழந்து விட்டால் அவர் முழுவதும் வெளியில் இருக்க வேண்டும், அதே சமயத்தில் தனிப்பட்ட பயிற்சியாக இருந்தால் 50 முதல் 70 பந்துகள் வரை சந்தித்து விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும், மேலும் நடு மைதானத்தில் இருந்து விளையாடுவதால், மைதானம் பழக்கமும் ஆகும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.