நேற்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி முதல் டி20 போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இன்று தொடர்ச்சியாக இரண்டாவது டி20 போட்டி நடக்க இருக்கும் நிலையில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? என்று பார்க்கலாம்.
ஜிம்பாப்வே டி20 தொடருக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஜெய்ஸ்வால் சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே மூவரும் இடம் பெற்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் தாமதமாக வெஸ்ட் இண்டீஸில் இருந்து இந்தியா திரும்பியதால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக இவர்களுக்கு பதிலாக முதல் இரண்டு போட்டிகளுக்கு ஹர்ஷித் ரானா, சாய் சுதர்சன், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.தற்போது இந்திய அணி தோல்வி அடைந்திருக்கின்ற காரணத்தினால் சாய் சுதர்சனுக்கு விளையாடும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் பரவலாக பேசி வருகிறார்கள்.
அடுத்த டி20 உலகக்கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கிறது. எனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இதற்கான அணியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் டி20 இந்திய அணியை உருவாக்கும் திட்டத்தின் முதல் நிலையில் சாய் சுதர்சன் இல்லை என்பதுதான் உண்மை.
உதாரணமாக 11 பேர் கொண்ட பிளேயிங் லெவனுக்கு நான்கு பேர் பேக்கப் வீரர்களாக இருப்பார்கள். இந்த 15 வீரர்களுக்கான இடத்தில் சாய் சுதர்சன் இல்லை. இந்த 15 பேரில் யாராவது மிக மோசமாக விளையாடினாலோ, இல்லை காயத்தால் வெளியேறினாலோ, பேக்கப் வீரராக மட்டுமே சாய் சுதர்சன் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் டி20 திட்டத்திற்குள் வர முடியும். அதற்கான வாய்ப்புகளும் குறைவாக இருக்கிறது.
இதையும் படிங்க : ஐபிஎல்-ல நடந்த பிரச்சனைகள்ல ஹர்திக் இதைத்தான் சொன்னாரு.. அவர் சாதாரண ஆள் கிடையாது – இஷான் கிஷான் பேட்டி
எனவே இன்று நடைபெறும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். அவரை 2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தயார்படுத்துவார்கள். இதன் காரணமாகத்தான் அவருக்கு தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக களம் இறங்கிய அதே இந்திய அணி களம் இறங்கவே வாய்ப்புகள் மிக அதிகம்!






