ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா ரோஹித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஐந்தாவது போட்டியில் விலகல்
ரோஹித் சர்மா சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் விளையாடாத நிலையில், இரண்டாவது போட்டி முதல் கேப்டனாக பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான இந்திய அணி ஒரு ட்ரா மற்றும் 2 தோல்வி என இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அணியின் சூழ்நிலை மற்றும் தனது பேட்டிங் ஃபார்ம் ஆகிய இரண்டைக் கருதியே தான் இந்த முடிவெடுத்ததாக ரோகித் சர்மா அப்போது கூறினார்.
அப்போது பிஆர் வேல்யூ எனப்படும் மக்கள் மத்தியில் தனது மதிப்பை கூட்டுவதற்காக ரோகித் சர்மா இதனை செய்திருக்கிறார் என்று சில விமர்சனங்கள் அப்போது எழுந்தது. அதற்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மீண்டும் இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா ஒரு நாள் தொடரை வெற்றி பெற்றார். இந்த சூழ்நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவரது தலைமையில் இந்திய அணி விளையாடும் நிலையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
ரோகித் இதற்காக செய்யவில்லை
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ரோகித் சர்மா மக்கள் மத்தியில் மதிப்பை கூட்ட இதை செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் நான் உணர்வது இதைத்தான், அவருடைய இயல்பு நிச்சயமாக இது கிடையாது. எனக்கு அவரை தனிப்பட்ட முறையில் நன்றாகவே தெரியும். அவர் தனது பிஆர் வேல்யூக்காக இப்படி செய்யக்கூடிய ஒரு வீரர் நிச்சயமாக கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட முடிவாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
இதையும் படிங்க:விராட் கோலி மனசுல அந்த விஷயம் மட்டும் இல்லனா.. இவ்ளோ பெரிய ஜாம்பவானா வந்திருக்கவே முடியாது – சுனில் கவாஸ்கர் புகழாரம்
இனிமேல் விளையாட முடியாது என்று உணரும் நாளில் அவர் தானே ஓய்வு பெறுவார். எனவே ரோகித் சர்மாவின் விருப்பத்திற்கும், தேர்வாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவரை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்பது தேர்வாளர்களின் விருப்பமாகும். எனவே ரோகித் சர்மா நன்றாக உணராத நாளில் அவரே தனது ஓய்வை அறிவிப்பார்” என்று அமித் மிஸ்ரா கூறி இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி தற்போது விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் விளையாடும்.






