நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்டின் பேட்டிங் செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. மிடில் வரிசை பெரிதாக அவரை சார்ந்து இருக்கும் நிலையில், அவரது மோசமான ஃபார்ம் காரணமாக அணி அடுத்த சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் தத்தளித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் ரிஷப் பண்ட் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான அம்பாதி ராயுடு சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ரிஷப் பண்ட்டின் மோசமான செயல்பாடு
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த ரிஷப் பண்ட் லக்னோ அணிக்காக 27 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு அதிகாரப்பூர்வ கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். கேப்டனாக அவரது செயல்பாடு லக்னோ அணியில் சிறப்பாக இருக்கிறதே தவிர பேட்டிங் செயல்பாடு மிகவும் மோசமான முறையில் இருந்து வருகிறது. சிஎஸ்கே அணிக்கு எதிராக மட்டும் ஓரளவு நன்றாக விளையாடி அரை சதம் அடித்திருந்தார்.
அதற்குப் பிறகு தொடர்ச்சியாக மோசமான செயல்பாடு காரணமாக வெற்றி பெறவேண்டிய போட்டிகளிலும் லக்னோ அணி தோல்வியை தழுவி இருக்கிறது. நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 236 ரன்கள் இலக்கை நோக்கி லக்னோ விளையாடிக் கொண்டிருந்தபோது ரிஷப் பண்ட் 17 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தது பெரிய விமர்சனத்தை உண்டாக்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
அவருக்காக வருந்துகிறேன்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “எல்லாவற்றிற்கும் மேலாக ரிஷப் பண்ட் தற்போது என்ன செய்ய விரும்புகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் ஒரு தொடக்க வீரராக வருகிறார். இருந்தால் அவர் மிடில் வரிசையில் சிறப்பானவராக இல்லை. ஆனால் அவர் மிடில் வரிசையில் விளையாட விரும்புகிறார் என்பது நன்றாக தெரிகிறது. ஆனால் அந்த வரிசையில் விளையாடுவதற்கான திறமை மற்றும் பேட்ஸ்மேன்ஷிப் அவரிடம் இல்லை.
இதையும் படிங்க:தோனிக்காக பிசிசிஐ இந்த வேலையை செஞ்சா.. இந்திய கிரிக்கெட்தான் தோல்வி அடையும்.. சுனில் கவாஸ்கர் விமர்சனம்
ஒருவேளை அவருக்கு திறமைகள் இருந்தாலும் அதை செயல்படுத்தும் மன நிலையில் தற்போது இல்லாமல் இருக்கலாம். இந்த நேரத்தில் அவர் தனது பேட்டிங் வரிசையோ அல்லது அணுகுமுறையையோ மாற்றாததால் அவருக்காக நான் மிகவும் வருந்துகிறேன். அவர் இந்த வரிசையை மாற்றாமல் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் இது விளையாட்டில் அனைவருக்கும் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒரு விஷயம்தான். எனவே இந்த அனுபவத்தை பயன்படுத்திக் கொண்டு அவர் தனது திறமையில் முன்னேறுவார் என்கிற நம்பிக்கை உள்ளது. கொஞ்சம் மனநிலை மற்றும் அணுகுமுறையை மாற்றி விளையாடினால் அவரால் சிறப்பாக முன்னேற முடியும்” என்று பேசி இருக்கிறார்.






