இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் தீவிரமான முறையில் தயாராகி வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு நியூசிலாந்து அணியில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான மூன்று வீரர்கள் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்த சாம்பியன் டிராபி தொடரில் இரண்டு வெற்றிகரமான அணிகள் தற்போது இறுதி போட்டிக்கு வந்துள்ளன. இந்திய அணி வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்திருக்கும் நிலையில் நியூசிலாந்து அணியும் முன்னணி அணிகளை வீழ்த்தி அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா பேட்டிங்கில் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். அதேபோல அணியின் கேப்டன் மிச்சல் சான்ட்னர் சுழற் பந்துவீச்சிலும் சிறப்பாக இருக்கும் நிலையில் இறுதி போட்டியில் டெவான் கான்வே இந்திய அணிக்கு எதிராக விளையாடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே இந்த மூன்று வீரர்களிடம் இந்திய அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு கூறியிருக்கிறார்.
இது குறித்து ராயுடு விரிவாக கூறும்போது “இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி மூன்று விஷயங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக மிடில் ஓவரில் நியூசிலாந்து அணியின் கேப்டன் சான்ட்னரின் சுழற் பந்துவீச்சு, மேல்மட்டத்தில் பேட்டிங் செய்யக்கூடிய ரச்சின் ரவீந்திரா இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ள டெவான் கான்வே உண்மையான இருண்ட குதிரையாக இருக்க முடியும்.
இதையும் படிங்க:விராட் கோலி கேப்டனாக இருந்தார்.. ஆனா அந்த விஷயத்துக்கு டீமை சம்மதிக்க வச்சது தோனி – ரவி சாஸ்திரி தகவல்
எனவே இந்த மூன்று வீரர்களை பற்றி நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று ராயுடு தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே தனது தவறுகளை திருத்திக் கொண்டு நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்துவதற்கு முழு வீச்சில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல அனைத்து துறைகளிலும் வலுவாக இருக்கக்கூடிய இந்திய அணியும் நியூசிலாந்து அணிக்கு கடும் சவால் கொடுக்கும் என்பதால் இந்தப் போட்டி நிச்சயம் பெரிய சுவாரசியமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.