வரவிருக்கும் ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவை அணிக்குள் கொண்டுவர முயற்சிப்பது குறித்தும், ஷிவம் துபேவை அணியிலிருந்து விடுவிப்பது குறித்தும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கூறியிருக்கும் அதிரடியான ஆலோசனைகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளுமே எதிர்பாராத விதமாக புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 9 ஆகிய இடங்களைப் பிடித்து ஏமாற்றம் அளித்தன. இதனால் அடுத்த சீசனுக்கு முன்பாக இரு அணிகளிடையேயும் வீரர்களை மாற்றி அமைக்கும் டிரேட் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக மும்பை அணியில் இருக்கும் ஹார்திக் பாண்டியாவை சென்னை அணிக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இதில் சென்னை அணியில் இருக்கும் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே மற்றும் இளம் பேட்டர் ஆயுஷ் மாத்ரே ஆகியோரை கொடுத்துவிட்டு ஹார்திக் பாண்டியாவை எடுக்கலாம் என்ற கருத்துக்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்போது “இது ஹார்திக் பாண்டியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு தரப்பிற்குமே மிகவும் நல்லதாக இருக்கும். அவரது தலைமையில் மும்பை அணி சரியான டீம் ஃபார்மேஷன் அமைக்க முடியாமலும் ஃபார்ம் இல்லாமல் தடுமாறியும் வந்தது. ஹார்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு வருவது ஒரு சிறந்த சேர்க்கையாக இருக்கும், ஏனெனில் இதன் மூலம் ஆல்ரவுண்டர் ஸ்லாட் முற்றிலும் பூர்த்தியாகிவிடும். நான் சிஎஸ்கே நிர்வாகமாக இருந்தால் ஷிவம் துபேவை இலவசமாகக் கொடுக்கக் கூட யோசிக்க மாட்டேன். துபேவைக் கொடுக்க எனக்கு டிரேட் கூடத் தேவையில்லை. நான் சிஎஸ்கேவாக இருந்தால் அவரை கண்டிப்பாக ஆக்ஷனுக்கு அனுப்பிவிட்டு தேவைப்பட்டால் மீண்டும் ஏலத்தில் எடுத்துக்கொள்வேன்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் “ஹார்திக் பாண்டியாவிற்காக சிஎஸ்கே அணி ஷிவம் துபே மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகிய இருவரையும் விட்டுக்கொடுப்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சிஎஸ்கே அணியிடம் ஏற்கனவே ஒரு சிறந்த பேட்டிங் லைன்அப் இருக்கிறது, எனவே ஹார்திக் பாண்டியாவிற்காக இவர்கள் இருவரையும் விட்டுக்கொடுப்பது அந்த அணியின் டாப் ஃபைவ் பேட்டிங்கை மிகவும் வலிமையான ஒன்றாக மாற்றிவிடும்” என்று கூறி இருக்கிறார்.