முடிவு பண்ணீட்டேன்.. இதான் என்னோட கடைசி ஐபிஎல்; பைனலுக்கு முன் ஷாக் கொடுத்த சிஎஸ்கே நட்சத்திரம்!

0
1048

இன்று நடைபெறும் பைனலுடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் சிஎஸ்கே அணியின் நட்சத்திரம்.

2010ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடர்களில் விளையாடி வரும் அம்பத்தி ராயுடு, 2010 முதல் 2017 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அங்கு மூன்று முறை ஐபிஎல் கோப்பைகளை பெற்றார்.

- Advertisement -

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு, 2018ஆம் ஆண்டு மீண்டும் ஐபிஎல்-க்கு வந்த சிஎஸ்கே அணிக்கு அம்பத்தி ராயுடு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அப்போது முதல் சிஎஸ்கே அணியின் முக்கிய அங்கமாக இந்த சீசன் வரை ராயுடு இருந்து வருகிறார். சிஎஸ்கே அணியுடன் சேர்ந்து 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பைகளை வென்றிருக்கிறார்.

இதுவரை 204 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அம்பத்தி ராயுடு, 22 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்திருக்கிறார். இதன் மூலம் 4329 ரன்களை குவித்திருக்கிறார். 14 சீசன்களில் 11 முறை பிளே-ஆப் சுற்றில் விளையடியுள்ளார். அதில் எட்டு முறை பைனலில் விளையாடியுள்ளார். ஐந்து முறை கோப்பைகளையும் இவர் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தனது ஒன்பதாவது பைனலில் விளையாடும் அம்பத்தி ராயுடு, இதுதான் தனக்கு கடைசி ஐபிஎல் சீசன்; இத்துடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அமைதியாக பதிவிட்டு நகர்ந்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

அம்பத்தி ராயுடு ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டதாவது:

“மும்பை மற்றும் சிஎஸ்கே எனும் இரண்டு தலைசிறந்த அணிகள், 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளே-ஆப், 8 பைனல்கள் மற்றும் ஐந்து டிராபிகள். சிறந்த பயணமாக எனக்கு அமைந்திருக்கிறது. இன்று இரவு பைனலில் விளையாடுவது எனக்கு கடைசி ஐபிஎல் போட்டி என்று முடிவெடுத்துள்ளேன். இத்தனை ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை நான் மிகவும் கொண்டாட்டமாக உணர்கிறேன். அனைத்திற்கும் நன்றி என் முடிவில் யு-டர்ன் இல்லை.”

சிஎஸ்கே அணியுடன் தொடர்ந்து ஆறாவது ஆண்டு பயணித்து வரும் அம்பத்தி ராயுடுவிற்கு இந்த சீசன் சிறப்பாக அமையவில்லை. இருப்பினும் சிஎஸ்கே அணியின் வழக்கமான அணுகுமுறைபடி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இறுதிப் போட்டியிலும் ராயுடு இருப்பார் என்று தெரிகிறது. இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி மறக்க முடியாத ஐபிஎல் போட்டியாக மாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே அணி ஐந்தாவது முறை கோப்பையை வெல்லுமா? அல்லது குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்று தக்கவைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!.