“ஆகாஷ் மத்வால் ஓவரில் மூணு சிக்ஸ் அடிச்சதும் மும்பையை முடிக்கிறதுனு முடிவு பண்ணிட்டேன்!” – சுப்மன் கில் மாஸ் பேச்சு!

0
4348
Gill

நேற்று ஐபிஎல் 11வது சீசனின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான முக்கியப் போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ் தகுதிப் பெற்றது!

இந்த போட்டியில் டாசை தோற்று முதலில் விளையாடிய குஜராத் அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் இளம் வீரர் சுப்மன் கில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

ஆரம்பத்தில் ஆடுகளத்தை படித்து மெதுவாக துவங்கிய அவர் போகப்போக ஆட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தி அரை சதம் அடித்தார். இதற்குப் பிறகு அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது.

இதற்கு அடுத்து பத்து ஓவர்கள் தாண்டி 12 வது ஓவரில் ஆகாஷ் மத்வால் வர சுப்மன் கில் தனது அதிரடியில் இறங்கினார். முதல் பந்து, இரண்டாவது பந்து மற்றும் ஐந்தாவது பந்தில் அபாரமான மூன்று சிக்ஸ்ர்களை பறக்க விட்டார்.

இங்கிருந்துதான் ஆட்டம் அப்படியே குஜராத் பக்கம் வர ஆரம்பித்தது. பேய் ஆட்டம் ஆடிய சுப்மன் கில் 60 பந்தில் ஏழு பவுண்டரி, பத்து சிக்ஸர் உடன் 129 ரன்கள் எடுத்தார். இந்தத் தொடரில் மொத்தம் பதினாறு போட்டிகளில் 851 ரன்கள் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

ஆட்டநாயகன் விருது பெற்ற சுப்மன் கில் பேசும் பொழுது ” பந்துக்குப் பந்து விளையாடுவது, நிலைமையை மதிப்பிடுவதுதான் முக்கியம். நான் ஆகாஷ் ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடித்த பொழுதுதான் இது என்னுடைய நாள் என்று உணர்ந்தேன். இது பேட்டிங் செய்ய நல்ல விக்கெட் எனவே நான் ஸ்கோரை உயர்த்த முடிவு செய்தேன்.

சிக்ஸ் அடிப்பது என்பது உடனே முடிவெடுத்து நடக்கக் கூடியது அல்ல. நீங்கள் தொடர்ந்து அதற்காக உருவாக வேண்டும். நம்பிக்கை மிகவும் முக்கியம். இது உங்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நல்ல சீசனுக்கு உதவுகிறது.

வெற்றி என்பது பல விஷயங்களின் கலவையாகும். கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் மாற்றம் தொடங்கியது. 2021 ஆம் ஆண்டு நான் காயமடைந்து என் பேட்டிங் பயிற்சி மற்றும் என்னுடைய பேட்டிங் தொழில்நுட்பத்தில் மாற்றம் வந்தது. நீங்கள் எப்பொழுதும் நீங்களாகவே மைதானத்திற்குள் நுழைய வேண்டும். இது என்னுடைய சிறந்த ஐபிஎல் இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!