“பும்ரா பாய் போறப்ப ஒரு விஷயம் சொல்லிட்டு போனார்.. அதான் விக்கெட் கிடைச்சது” – ஆகாஷ் தீப் பேட்டி

0
397
Bumrah

இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆகாஷ் தீப் சிறப்பான முறையில் பந்துவீச்சில் செயல்பட்டு இருக்கிறார்.

தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆகாஷ் தீப் வேகப்பந்து வீச்சில் அசத்தலாக செயல்பட்டு இங்கிலாந்தின் முதல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுத்தார்.

- Advertisement -

அவர் இன்று ஜாக் கிரவுளியை கிளீன் போல்ட் செய்து தன்னுடைய முதல் விக்கெட்டை கைப்பற்றியதாக நினைத்தபொழுது, அந்தப் பந்து நோபாலாக அமைந்தது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எவ்வளவு போராட்டமாக அமைந்ததோ, அதுபோல அவரது சர்வதேச கிரிக்கெட்டின் முதல் விக்கெட்டும் போராட்டமாக அமைந்தது.

ஆனால் அவர் வாழ்க்கையில் கண்ட எல்லா தடைகளையும் எப்படி போராடி வென்றாரோ அதேபோல தனது முதல் விக்கெட்டையும் போராடி வென்றார். முதல் விக்கெட்டாக பென் டக்கெட்டை வீழ்த்தினார். பின்பு அதே ஓவரில் போப் விக்கட்டையும் கைப்பற்றினார். அதற்கு அடுத்து வந்த அவர் ஜாக் கிரௌலியையும் வெளியேற்றினார்.

இன்று மொத்தம் 17 ஓவர்கள் வீசி இருக்கும் அவர் 70 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். தற்பொழுது இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நாளை இந்திய அணி புதிய பந்தில் பந்துவீசும். எனவே ஆட்டத்தில் புத்துணர்ச்சியோடு வரும் இந்திய பந்துவீச்சாளர்களில் முதலில் வீச வாய்ப்பிருக்கும் ஆகாஷ் தீப், தனது அறிமுக போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றவும் வாய்ப்புகள் உண்டு.

தன்னுடைய பந்து வீச்சு சிறப்பாக இருந்ததற்கான காரணத்தை கூறியுள்ள ஆகாஷ் தீப் ” நான் பயிற்சியாளர்களுடன் ஏற்கனவே என்ன செய்ய வேண்டும் என்று பேசி இருந்த காரணத்தினால், எனக்கு போட்டியின் போது எந்த பதற்றமும் ஏற்படவில்லை. இன்று நடந்ததெல்லாம் எப்படி நடந்தது என்றும் தெரியவில்லை.

ஜாக் கிரௌலிக்கு நான் நோபால் வீசி விக்கட்டை விட்ட பிறகு, இதனால் இந்திய அணி தோற்கும் என்கின்ற நிலைமை வராது என்று உறுதியாக நம்பினேன். பின்பு அவரது விக்கெட்டை நானே கைப்பற்றினேன்.

மேலும் பும்ரா பாய் என்னிடம் சர்வதேச கிரிக்கெட்டில் பந்தின் லென்த்தை கொஞ்சம் பின்னோக்கி இழுத்து வீசும் படி அறிவுரை கூறியிருந்தார். அவர் சொல்படியே நான் செயல்பட்டேன். அதனால் எனக்கு விக்கெட்டுகள் கிடைத்தது. அதே சமயத்தில் பந்து கொஞ்சம் தேய்ந்து மென்மையாக ஆன பின்பு, மெதுவான ஆடுகளத்தில் பெரிய உதவிகள் கிடைக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து சரியான பகுதிகளில் பந்து வீச முயற்சி செய்தோம்” என்று கூறியிருக்கிறார்.