இந்திய கிரிக்கெட்டில் தற்பொழுது உள்நாட்டு கிரிக்கெட் விளையாடுவது பெரிய சர்ச்சையான விஷயமாக மாறி வருகிறது. இஷான் கிஷான் ஆரம்பித்த இந்த விஷயம் மிகத் தீவிரமாக இந்திய கிரிக்கெட்டில் பேசப்படுகிறது.
கடந்த ஆண்டின் இறுதியில் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரில் இருந்து இசான் கிஷான் மனச்சோர்வு காரணமாக வெளியேறி வந்தார்.
ஆனால் மேற்கொண்டு ரஞ்சி கிரிக்கெட்டில் தன்னுடைய மாநில அணி ஜார்க்கண்டுக்காக விளையாட செல்லவில்லை. அதே சமயத்தில் அவர் வீட்டிலும் இருக்கவில்லை. ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளை ஆரம்பித்து இருந்தார். இதுதான் பிரச்சினைகளை பெரிதாக்கிவிட்டது.
அதே சமயத்தில் விராட் கோலி தன்னுடைய தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக ஓய்வு கேட்டு வாங்கி இருக்கிறார். எனவே இவர்கள் இருவருக்கும் ஓய்வு விஷயத்தில் வித்தியாசம் இருக்கிறது.
ஐபிஎல் தொடர் வருகின்ற காரணத்தினால் சில வீரர்கள் தங்களை உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு கிடைக்க செய்யாமல் தனிப்பட்ட முறையில்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை தடுக்க பிசிசிஐ தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “உள்நாட்டு தொடரில் நிறைய இளைஞர்கள் விளையாடுவதில்லை என்று கேள்விப்படுகிறேன். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவோம் என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால் புஜாரா மற்றும் ரகானே இருவரும் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் பொழுது, நீங்கள் இந்திய அணிக்கு விளையாடவில்லை என்றாலோ, உங்களுக்கு காயம் இல்லை என்றாலும், நீங்கள் சென்று உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட வேண்டும். அப்படி யாராவது விளையாடாமல் இருந்தால், அவர்களுக்கு அது குறித்து செய்திகள் அனுப்ப வேண்டும்.
நீங்கள் ஐபிஎல் மட்டுமே விளையாடுவீர்கள் அதன் மூலமாக மூன்று வடிவ இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம் பிடித்து விடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. இந்த விஷயத்தில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு கண்டிப்பாக நடந்து கொள்ளும் என நினைக்கிறேன்.
இதையும் படிங்க : “இந்திய அணியில் அவருக்கு பலவீனமே இல்லை.. அதனால அந்த பையனின் ஈகோவை தூண்டுங்க” – இங்கிலாந்து அணிக்கு லெஜெண்ட் அறிவுரை
இந்த விஷயத்தில் விராட் கோலி மற்றும் பும்ரா மட்டுமே விதிவிலக்காக இருக்க முடியும். ஏனென்றால் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடுகிறார்கள். அவர்களுடைய பணிச்சுமையை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இனி உள்நாட்டு கிரிக்கெட் விளையாடாதவர்களுக்கு இந்திய கிரிக்கெட்டில் வாய்ப்பு கொடுக்காதீர்கள்” எனக் கூறியிருக்கிறார்