இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்த விதம் குறித்து இந்திய முன்னாள் ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கவலை தெரிவித்து இருக்கிறார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஏற்கனவே தோல்வி அடைந்திருப்பதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் விளையாடிய இந்திய அணிக்கு இந்த முறையும் பேரடியாக அமைந்திருக்கிறது. முதல் இன்னிங்ஸ் முடிவில் 489 ரன்கள் குவித்தது தென் ஆப்பிரிக்க அணி அதற்குப் பிறகு 260 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய, இந்திய அணி தற்போது இரண்டு விக்கெட் இழப்புக்கு 522 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு கடைசி நாள் ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளது.
இந்த சூழ்நிலையில் நேற்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 13 ரன்னில் இருந்த போது மார்க்கோ ஜான்சன் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தில் கட் அடிக்க முயற்சித்து ஆட்டம் இழந்தார். இது இந்த தொடரில் அவருக்கு மூன்றாவது முறையாக நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இது குறித்து கவலை தெரிவித்து இருக்கும் ஆகாஷ் சோப்ரா, ஜெய்ஸ்வால் இப்போது அனுபவம் அற்ற பேட்ஸ்மேன் கிடையாது, அவர் அறிமுகமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும் அவர் தனது பேட்டிங் தேர்வை சரி செய்ய வேண்டும் என்று கவலை தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “மாற்றம் பற்றி பேசினால் ஜெய்ஸ்வால் இப்போது ஒரு அனுபவம் அற்ற பேட்டிங் வரிசையில் இல்லை. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. சமீபத்தில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் அவரும் ஒருவர் எனவே அவருக்காக நான் கவலைப்படுகிறேன். இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் இதே வழியில் தொடர்ந்து அவுட் ஆகி வருகிறார்.
இதையும் படிங்க:ஐசிசி டி20 உலககோப்பை அட்டவணை விவரம்.. இந்தியா, பாகிஸ்தான் போட்டி எப்போது
யார் எப்போது வேண்டுமானாலும் இந்த வகையிலும் ஆட்டம் விளக்கலாம். ஆனால் இவர் மார்க்கோ ஜான்சனின் பந்துவீச்சில் மட்டும் மூன்று முறை தொடர்ச்சியாக இதே போன்று ஆட்டம் இழந்து இருக்கிறார். அந்த கட் ஷாட் அவரது ஸ்டைலாக இருக்கலாம், ஆனால் அதுவே அவருக்கு பிரச்சனையாகவும் இருக்கிறது. எனவே உடலை நோக்கி வரும் பந்துகளுக்கு அவர் கட் சாட் அடிக்க முயற்சிக்கும்போது தனது ஷார்ட் தேர்வை சரி செய்ய வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.