இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட் செயல்படும் விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை பகிர்ந்து இருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 84 ரன்கள் மற்றும் பினிஷர் ரிங்கு சிங் 20 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு களம் இறங்கிய நியூசிலாந்து அணி 48 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான பும்ரா மற்றும் அர்ஸ்திப் சிங் இருவர் குறித்து ஆகாஷ் சோப்ரா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார். அர்ஸ்தீப் சிங் புதிய பந்தை கையில் எடுப்பதன் மூலமாக பும்ரா போதுமான சவுகரியத்தை பெறுவதாகவும், அதனால் அவர் டெத் ஓவர்களில் இரண்டு ஓவர்கள் நிலையாக வீச முடியும் என்று அவர் கருதுகிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “அர்ஷ்தீப் பந்து வீசினால் பும்ரா புதிய பந்தை தொட மாட்டார். பவர் பிளே ஓவர்களை அர்ஸ்தீப் சிங் பார்த்துக் கொள்வதால் பும்ரா பவர் பிளேவில் ஒரு ஓவர் மட்டுமே வீசலாம். மேலும் நடுநிலையில் ஒரு ஓவர் மற்றும் இறுதி கட்டத்தில் இரண்டு ஓவர்கள் என அவரால் சிரமமின்றி வீச முடியும். பவர் பிளே ஓவர்களில் பும்ரா உண்மையில் இரண்டு ஓவர்கள் வீச வேண்டிய அவசியம் கிடையாது.
ஒரு பார்ட்னர்ஷிப்பை உடைத்து மூன்று ஓவர்களில் ஒன்றை நடுவிலும் மீதம் இரண்டு ஓவர்களை டெத் வரிசையிலும் அவரால் வீச முடியும். ஆனால் இது அர்ஸ்தீப் சிங் அவரோடு இணைந்து விளையாடினால் மட்டுமே இது சாத்தியமாகும்” என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.






