நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது t20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இருப்பினும் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் ஆட்டத்திறன் பாதிப்பது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
கௌகாத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு களம் இறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் மேட் ஹென்றியின் பந்துவீச்சில் தான் சந்தித்த முதல் பந்திலையே ஸ்டம்புகள் சிதற ஆட்டம் இழந்தார். கடந்த போட்டியிலும் 6 ரன்னில் ஆட்டம் இழந்த நிலையில் அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் கேள்விகளுக்கு உள்ளாகி வருகிறது.
அதே வேளையில் தற்போது நியூசிலாந்து தொடரில் இடம் பெற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது இடத்தை உறுதி செய்து வருகிறார். மேலும் இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருப்பதால் தொடக்க வீரர் சஞ்சுவின் இடத்தை கைப்பற்றவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் ஆகாஷ் சோப்ரா பேசும் போது “அவரது ஆட்டம் இப்படியே தொடரும் பட்சத்தில் அவர் வெளியே உட்கார வேண்டிய சூழ்நிலை வரும். ஒன்று அவர் ரன்கள் எடுக்கவில்லை மேலும் இரண்டாவதாக இசான் கிஷன் நீக்க முடியாத வீரராக தெரிகிறார். சஞ்சுவுக்கு நேரம் குறைந்து கொண்டே வருவது போல தெரிகிறது. அவரது கிரிக்கெட் வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் பங்களாதேஷில் தொடங்கி தென்ஆப்பிரிக்க தொடர் வரை ஏழு போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்து இருந்தார், அதில் இரண்டு தொடர்ச்சியான சதங்கள்.
அப்போது அவர் தேசத்தின் நாயகனாக தோன்றினார். சஞ்சுவுக்கு இறுதியாக அங்கீகாரம் கிடைத்து விட்டது போல தோன்றியது. அதன் பிறகு இங்கிலாந்தில் தொடர்ந்தது சஞ்சு ஒரே மாதிரியாக 5 முறை தொடர்ச்சியாக ஆட்டம் இழந்தார். அதில் அவருக்கு சந்தேக விதைகளை விதைத்திருக்கலாம். அதன் பிறகு காயம் காரணமாக மோசமான ஐபிஎல் தொடர் பின்னர் ஆசியக் கோப்பை தொடரிலிருந்து நீக்கம் என்று பிரச்சனைகள் சூழ்ந்து கொண்டிருந்தது. அவரை அணியிலிருந்து நீக்கியதற்கு இந்திய அணி குற்ற உணர்ச்சி கொண்டது. அதற்குப் பிறகு பொருத்தம் இல்லாத இடத்தில் அவரை விளையாட வைத்தது. அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அது சரியான வாய்ப்புகளாக இருக்கவில்லை” என்று பேசி இருக்கிறார்.