இலங்கை அணிக்கு எதிராக நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-0 என இழந்தது. தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கும் இலங்கை அணியிடம் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி தொடரை இழந்தது நிறைய விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா புதிய விமர்சனம் ஒன்றை வைத்து இருக்கிறார்.
நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்த ஒரு விஷயமாக இருந்து வருகிறது.
அதே சமயத்தில் மொத்தத் தொடரையும் திரும்பி பார்க்கும் பொழுது இலங்கை சுழல் பந்துவீச்சாளர்கள் செலுத்திய ஆதிக்கத்தை இந்திய சுழல் பந்துவீச்சாளர்களால் செலுத்த முடியாதது மிகப்பெரிய ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. இலங்கை பேட்ஸ்மேன் அந்த அளவுக்கு திறமையாக விளையாடினார்களா? என்கின்ற கேள்வியும் வருகிறது.
மிகக்குறிப்பாக ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் சூழ்நிலையில் குல்தீப் யாதவ் போன்ற உலகத்தரமான சுழல் பந்துவீச்சாளர் எதிரணியை முடக்கும் அளவுக்கான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. தற்பொழுது இது குறித்துதான் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதுபற்றி பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “இந்திய பந்துவீச்சாளர்களால் பந்துவீச்சில் இன்னிங்ஸை முடித்துக் கொடுக்க முடியவில்லை. அவர்கள் எப்படியும் விக்கெட்டுகளை பெற்று விடுவோம் என்று இருந்தார்கள். ஒருவேளை விக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றால் பேட்டிங்கில் டார்கெட்டை சேஸ் செய்து விடுவோம் என்று இருந்தார்கள். ஆனால் அவர்கள் இரக்கமற்ற முறையில் பந்துவீச்சில் அபாரமாக இருக்கவில்லை.
இதையும் படிங்க: பாபர் அசாம் கடைசி.. தனது டாப் 5 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த அடில் ரசித்.. முதலிடத்தில் இந்திய வீரர்
சுழல் பந்துவீச்சுக்கு சாதகம் இல்லாத தட்டையான ஆடுகளத்தில் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களை மிகச் சிறப்பாக செயல்பட விடாமல் செய்கிறார்கள். அதே சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் எங்களுடையபேட்டிங் தரம் குறைவது போலவே, எங்களுடைய பந்துவீச்சாளர்களும் விக்கெட்டு எடுக்க சிரமப்படுகிறார்கள். இந்திய அணி இந்த இரண்டு பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.