22 வருடச் சாதனையை சமன் செய்த அஜாஸ் பட்டேல் – இப்போட்டியில் படைக்கப்பட்ட அனைத்து சாதனைகளும் உள்ளே இணைப்பு

0
328
Ajaz Patel 10 Wicket Haul against India

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்மரமாக தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணியின் ஸ்பின் பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 47.5 ஓவர்கள் வீசி வெறும் 119 ரன்கள் மட்டுமே கொடுத்து 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதில் அவர் 12 மெய்டன் ஓவர்கள் வீசி இருப்பது குறிப்பிடதக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது பந்துவீச்சாளராக 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அஜாஸ் பட்டேல் அசத்தல்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்னர் இரண்டு பந்து வீச்சாளர்கள் மட்டுமே ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்கள்.1956ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை சேர்ந்த ஜிம் லேக்கர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும், 1999 ஆம் ஆண்டு இந்திய அணியைச் சேர்ந்த அனில் கும்ப்ளே பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் கைப்பற்றியிருந்தனர்.அவர்களைத் தொடர்ந்து 3வது பந்துவீச்சாளராக இந்திய அணிக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அவர்களது சாதனையை அஜாஸ் இன்று சமன் செய்துள்ளார்.

- Advertisement -

மும்பையில் பிறந்து இன்று அதே மும்பை வான்கடே மைதானத்தில் தன் பெயரை நிலைநாட்டிள்ள அஜாஸ் பட்டேல்

மும்பையில் பிறந்து எட்டு வயதில் நியூசிலாந்துக்கு சென்று தற்பொழுது நியூசிலாந்து கிரிக்கெட் விளையாடி வரும் அவர், தான் பிறந்த மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தன்னுடைய பெயரை நிலை நாட்டி இருக்கிறார். போட்டி துவங்குவதற்கு முன்பாக, “நான் பிறந்த மும்பையில் இன்று மீண்டும் இங்கு விளையாடுவது எனக்கு சற்று உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது” என்று அஜாஸ் கூறியிருந்தார்.

இந்தியாவில் ஒரு வெளிநாட்டு பந்துவீச்சாளர் 10 விக்கெட்டுகளை கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும். அதே சமயம் இந்திய அணிக்கு எதிராக ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக 10 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்சில் கைப்பற்றுவதும் இதுவே முதல் முறையாகும். இன்று இந்த இரண்டு சாதனையையும் அஜாஸ் பட்டேல் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளார்.

இதுமட்டுமின்றி நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் மத்தியில் ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக ரிச்சர்ட் ஹாட்லி ( 1985ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகள் )தான் இந்த போட்டிக்கு முன்பு வரையில் இருந்தார். இன்று அவரை பின்னுக்கு தள்ளி அந்த சாதனையையும் தற்பொழுது தனக்கு சொந்தமாக்கி கொண்டுள்ளார் அஜாஸ் பட்டேல்.

- Advertisement -