மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா அடித்த அபார சதத்தை தொடர்ந்து, அவரது அணியின் இடம் குறித்து முன்னாள் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் எடுத்த முடிவை எண்ணி தற்போது வருந்துவார் என்று இந்திய முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
அடுத்து வரும் 2027 உலகக்கோப்பைக்கான அணியில் ரோஹித் சர்மா இடம்பெறக்கூடாது என்பதில் அகர்கர் உறுதியாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ரோஹித் சர்மா தொடர்ந்து தனது சிறப்பான பேட்டிங் மூலமாக வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதை நிரூபித்து வருகின்றார்.
ரோஹித் சர்மாவின் இந்த சிறப்பான ஃபார்ம் குறித்து சடகோபன் ரமேஷ் பேசும்போது “அடுத்த ஆண்டு உலகக்கோப்பை ஸ்குவாடில் ரோஹித் சர்மா இருக்கக்கூடாது என்பதில் அஜித் அகர்கர் ஒற்றைக் காலில் நின்றதாக செய்திகள் வெளியாயின. அதனால்தான் அகர்கரின் கான்ட்ராக்ட் நீட்டிக்கப்படவில்லை. ஆனால், ரோஹித் தனது ஃபிட்னஸ் மூலம் வயது வெறும் எண் மட்டுமே என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். 50 ஓவர்கள் ஃபீல்டிங் செய்துவிட்டு, பின்னர் மீண்டும் ஓப்பனிங் களமிறங்கி சதம் அடிப்பது சாதாரண விஷயமல்ல. ரோஹித் சர்மாவின் இந்த இடத்தைப் பற்றிய தனது முடிவை நினைத்து அகர்கர் இப்போது கண்டிப்பாக வருந்துவார்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா காம்பினேஷன் குறித்து சடகோபன் ரமேஷ் பேசும்போது “தற்போது ரோஹித் மற்றும் விராட் இடையே ஒரு சுவாரஸ்யமான பேட்டர்ன் நிலவுகிறது. ஒருவர் செஞ்சுரி அடித்தால், அடுத்த போட்டியில் மற்றொருவரும் சதம் அடிக்கிறார். இருவருக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான காம்படிஷன் நிலவுகிறது. காயம்பட்ட சிங்கத்தை போல் இருவரும் சீறிப்பாய்ந்து பேட்டிங் செய்து வருகிறார்கள். இதுபோன்ற பிளாட் பிட்ச்சில் ரோஹித் சர்மா தனது வெறித்தனமான பேட்டிங் மூலம் சதம் அடித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து இந்திய பிட்ச்கள் குறித்து சடகோபன் ரமேஷ் பேசும்போது “இந்திய அணி நிர்வாகம் மீண்டும் மீண்டும் ஒரே தவற்றை செய்து வருகிறது. சொந்த நாட்டில் இதுபோன்ற பேட்டிங் ஃப்ரெண்ட்லி பிட்ச்களில் விளையாடி வெற்றி பெற்றுவிட்டு, வெளிநாடுகளில் அயர்லாந்து போன்ற அணிகளுக்கு எதிராகவும் திணறும் நிலை உருவாகிறது. 2027 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடக்கும்போது அங்கு இவ்வளவு அதிகமான ரன்கள் அடிக்க முடியாது. அதற்கு தயாராகும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இங்கேயே பேட்டர்ஸ் மற்றும் பௌலர்களுக்கு சமமான பிட்ச்களை அமைத்து போட்டிகளை நடத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.