இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலியின் புதிய அதிரடி பேட்டிங் அணுகுமுறை மற்றும் அவரின் தற்போதைய ஃபார்ம் குறித்து ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டி பேசியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி விரைவாக 15,000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த ஆண்டில் அவரின் ஸ்டிரைக் ரேட் மற்றும் பேட்டிங் ஃபார்ம் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.
விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தனது பேட்டிங் பாணியை மாற்றி மிகவும் அதிரடியாக விளையாடி வருவதை முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டி வருகிறார்கள்.
உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக விராட் கோலி இப்படி விளையாடுவது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஏபி டி வில்லியர்ஸ் பேசும்போது “அவர் இந்த வழியில் பேட் செய்வதைப் பார்ப்பது அற்புதமாக இருக்கிறது, உலகக்கோப்பைக்கு சற்று முன் இது நடப்பது மிகவும் நல்ல விஷயம். அவர் எக்காலத்திலும் சிறந்த ஒருநாள் பேட்டர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தற்போது அவர் தனது அதிரடியான மற்றொரு பக்கத்தையும் காட்டி வருகிறார். அவர் சிறப்பாக விளையாடும்போது பாசிட்டிவாக ஆட வேண்டும் என்று திட்டமிட்டு உழைத்துள்ளார். விஷயங்களை அளவுக்கு அதிகமாக யோசிப்பது சில நேரங்களில் உங்கள் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இது அவருக்கு மூன்றாவது உச்சக்கட்ட ஃபார்ம் போல் உணர்கிறேன், ஏனெனில் அவர் எப்போதையும் விட சிறப்பாக பேட் செய்கிறார். இந்த முறை அவரின் ஸ்டிரைக் ரேட் அதிகமாக உள்ளது. அவரின் இந்த அக்ரசிவ் ஆட்டம் தனித்து நிற்கிறது. ஒருநாள் போட்டிகளில் 88 பந்துகளில் 139 ரன்கள் என்பதை கோலியிடம் நாம் முன்பு பார்த்ததே இல்லை. அவர் முன்பு மிகவும் நிதானமாக ஆடி ஆங்கர் ரோல் செய்து இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு தூணாக இருந்தார். இப்போது விராட் மனதளவில் சுதந்திரமாக இருப்பது போல் உணர்கிறேன். 2027 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு இது மிகப்பெரிய பலமாக இருக்கும். மற்ற வீரர்களும் இதனால் தன்னம்பிக்கை பெறுவார்கள்” என்று கூறி முடித்தார்.