8 வருட கிரிக்கெட்டில் முதல்முறையாக சஞ்சு சாம்சனை ஒப்பந்தம் செய்த பிசிசிஐ; அங்கீகாரம் கிடைத்தது எப்படி? – தரவுகளுடன் விளக்கம்!

0
4786

2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சஞ்சு சாம்சனை கிட்டத்தட்ட எட்டு வருடத்திற்கு பிறகு முதல்முறையாக ஒப்பந்தம் செய்திருக்கிறது பிசிசிஐ. அதற்கான விவரத்தை பார்ப்போம்.

ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் இருந்தே அபாரமாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன், ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் போட்டிகளில் அபாரமாக விளையாடிய பிறகும் சர்வதேச கிரிக்கெட்டில் இடம் கிடைக்காமல் தவிர்த்து வந்தார்.

- Advertisement -

2015ஆம் ஆண்டு முதல் முறையாக டி20 தொடரில் இடம் கொடுக்கப்பட்டது. ஓரிரு போட்டிகளுக்கு பிறகு, தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு டி20 தொடர்களில் இவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஒருநாள் தொடரிலும் அறிமுகம் ஆனார்.

கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் மிக சிறப்பாக செயல்பட்டாலும், டி20 உலகக்கோப்பை தொடர் மற்றும் ஆசியகோப்பை தொடர்களில் மீண்டும் புறக்கணிக்கப்பட்டார். பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம்கிடைத்து, அதிலும் நன்றாக செயல்பட்டிருந்த போதும் வங்கதேச அணிக்கு எதிரான தொடர், இலங்கை தொடர் என வரிசையாக புறக்கணிக்கப்பட்டார்.

இருப்பினும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டதால், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான 8 வருடத்திற்கு பிறகு முதல் முறையாக பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம் பெற்று இருக்கிறார்.

- Advertisement -

கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இவர் செயல்பட்ட புள்ளி விவரத்தை பார்ப்போம்.

2022ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் – 284 ரன்கள், 71 சராசரி மற்றும் 105 ஸ்ட்ரைக்-ரேட் வைத்திருக்கிறார். டி20 போட்டிகளில் – 179 ரன்கள், 44.7 சராசரி மற்றும் 159 ஸ்ட்ரைக்- ரேட் வைத்திருக்கிறார். இரண்டுவித போட்டிகளிலும் நன்றாக செயல்பட்டதற்கு அங்கீகாரமாக சி-பிரிவு ஒப்பந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள சஞ்சு சாம்சன், ஐபில் போட்டிகளில் அபாரமாக செயல்படும் பட்சத்தில், ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் மீண்டும் இடம்பிடிக்கலாம். இந்த வருடம் நடக்கவுள்ள 50-ஓவர் உலகக்கோப்பை, அடுத்த வருடம் நடக்கவுள்ள 20-ஓவர் உலகக்கோப்பை இரண்டிலும் விளையாடும் வாய்ப்பை பெறலாம்.