பங்களாதேஷை பந்தாடியது ஆப்கானிஸ்தான்; ஒன்சைடு வெற்றி!

0
11209
Banvsafg

ஆப்கானிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் 546 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியிடம் வீழ்ந்தது ஆப்கானிஸ்தான் அணி.

இதற்கு அடுத்து தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் முடிந்ததும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெஸ்ட் தொடரில் இடம் பெறாத நட்சத்திர ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் இந்தப் போட்டிக்கு திரும்பி வந்தார்.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் ஆரம்பம் முதல் இறுதிவரை பங்களாதேஷ் அணியை எந்த ஒரு இடத்திலும் எழவே விடவில்லை. முழுக்க முழுக்க ஒரு சாம்பியன் அணி போல பங்களாதேஷ் அணியின் மேல் அவர்கள் நாட்டில் வைத்தே ஆதிக்கம் செலுத்தி ஆச்சரியப்படுத்தினார்கள்.

பங்களாதேஷ் அணியின் இளம் வீரர் தவ்ஹீத் ஹ்ரிடாய் மட்டுமே தாக்குப் பிடித்து 51 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக அதிகபட்ச ரன்கள் எடுத்தவர் லிட்டன் தாஸ் மட்டுமே. அவர் 26 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

பங்களாதேஷ் அணியின் சீனியர் பேட்ஸ்மேன்கள் தமீம் இக்பால், சகிப் அல் ஹசன், முஷ்பிக்யூர் ரஹீம் இவர்கள் மூவரும் 12, 15, 1 என சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்கள். முடிவில் பங்களாதேஷ் அணி மழையால் நாற்பத்தி மூன்று ஓவர்களாக குறிக்கப்பட்ட ஆட்டத்தில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 21.4 ஓவர்கள் விளையாடியிருந்த பொழுது, மீண்டும் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து பெய்த மழை நிற்காத காரணத்தால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. அப்பொழுது ஆப்கானிஸ்தான் அணி இரண்டு விக்கட்டுகள் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஆப்கானிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் பரூக்கி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 8.4 ஓவர்கள் பந்துவீசி, ஒரு மெய்டன் செய்து, 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார். தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்று முன்னிலை வகிக்கிறது!