இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டிங் சம்பந்தமாக கேட்ட ஒரு முக்கியமான உதவியை தான் செய்ய தயாராக இருப்பதாக ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்திருக்கிறார்.
தற்போது சூரியகுமார் யாதவ் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்த போதிலும் கூட அவர் டி20 வடிவத்தில் மட்டுமே விளையாடுகிறார். அவரால் குறைந்தபட்சம் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் கூட வெற்றிகரமான பேட்ஸ்மேனாக இருக்க முடியவில்லை.
சூரியகுமார் யாதவ் கோரிக்கை
இந்த நிலையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் தனக்கு இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் சிறப்பான கிரிக்கெட் வீரம் இருப்பதாகவும், எனவே தான் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடாமல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என்கின்ற ஆசையை வெளிப்படுத்தினார்.
இதற்கு எல்லா வடிவங்களிலும் அதிரடியாகவும் அதே சமயத்தில் நிலைத்தன்மையுடனும் ஏபி டிவில்லியர்ஸ் எப்படி ரன்கள் எடுத்தார் என அவரிடம் பேசி தெரிந்து கொள்ள விரும்புவதாகவும், இந்த விஷயத்தில் அவர் தனக்கு உதவி செய்ய வேண்டும், கூடிய விரைவில் அவரை சந்திப்பேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
உதவி செய்ய தயாராக இருக்கிறேன்
இந்த நிலையில் ஏபி டிவில்லியர்ஸ் தற்பொழுது சூரியகுமார் யாதவுக்கு இந்த விஷயத்தில் உதவ தயாராக இருப்பதாகவும் இதற்காக என்ன தேவைப்படுமோ அதை முன்கூட்டியே தயார் செய்து கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க : பாகிஸ்தானில் இருந்து வெளியேற துடிக்கும் இலங்கை அணி.. திட்டங்களில் அதிரடி மாற்றம்.. புதிய அறிவிப்புகள்
இதுகுறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசும்பொழுது ” சூரியகுமார் யாதவிடம் கேட்க எனக்கு நிறைய கேள்விகள் இருக்கிறது. அதே சமயத்தில் அவருடைய கேள்விகளுக்கும் நான் தயாராக இருப்பேன். எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் சீராக இருக்க அவர் விரும்புகிறார். அதே சமயத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்று தெரிகிறது. எனவே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு இடையே நிலைத்தன்மையை கண்டுபிடிக்க நான் அவருக்கு உதவ தயாராக இருக்கிறேன். இதற்கான ஹோம் ஒர்க்கை செய்து கொண்டு வர விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






