ஆஃப்கானிஸ்தான் தொடருக்குப் பிறகு இந்திய தலைமை கோச் கௌதம் கம்பீர் அளித்த கருத்து குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது பார்வையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சமீபகாலமாக இந்திய ஒருநாள் கேப்டன் சுப்மன் கில்லுக்கு முழுமையான முதன்மை அணி கிடைக்காத சூழல் நிலவுகிறது. காயம் மற்றும் பணிச்சுமை மேலாண்மை காரணமாக முக்கிய வீரர்கள் தொடர்ந்து விளையாட முடியாமல் போவது அணியின் செயல்பாட்டைப் பாதிக்கிறது.
வரவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் தொடரிலும் இந்திய அணி முழு பலத்துடன் களமிறங்க முடியாத நிலையே உள்ளது. இதனால் கேப்டன் சுப்மன் கில் பல தருணங்களில் முதன்மை வீரர்கள் இன்றிச் சவால்களைச் சந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்.
இதுகுறித்து கௌதம் கம்பீர் பேசும்போது, “ஒரு இளம் கேப்டனுக்குத் தொடர்ச்சியாகச் சிறந்த பிளேயிங் லெவன் கிடைக்காதது நியாயமல்ல. பயிற்சியாளராக விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் சுப்மன் கில்லுக்கு ரெட் பால் மற்றும் ஒயிட் பால் என அனைத்து ஃபார்மட்களிலும் சிறந்த பிளேயிங் லெவன் கிடைக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது, “கம்பீர் தவறாகக் கூறவில்லை, தற்போதைய சூழலில் முழு அணியையும் பெறுவது சாத்தியமில்லை. அவர் யாரையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டவில்லை, சுப்மன் கில்லிடம் முதன்மை பவுலர்கள் இல்லாததால் அவர் நிச்சயம் ஏமாற்றமடைவார்” என்று கூறி இருக்கிறார்.






