இந்தியாவில் ஒளிபரப்பு போடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒன்று கவுண் பனேகா குரோர்பதி. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தூத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பு சில காலமாக தமிழ் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்தால் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். ஆரம்பத்தில் பரிசுத்தொகை ஒரு கோடியாக இருந்தது. தற்போது இந்த நிகழ்ச்சியின் பரிசுத்தொகை 7.5 கோடியாகும்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரிடம் கிரிக்கெட் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவருக்கு பதில் தெரியாததால் வென்ற 12.5 லட்சத்துடன் போட்டியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அவருக்கு கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான பதில் அளித்து இருந்தால் 25 லட்ச ரூபாய் கிடைத்திருக்கும்.
இந்தப் போட்டியில் பங்கேற்று விளையாடிய வர்ஷா சரோகி என்பவரிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அமிதாப்பச்சன் கிரிக்கெட் தொடர்பான கேள்வி ஒன்றைக் கேட்டார். அந்தக் கேள்விக்கு முன்பாக 12.5 லட்சம் ரூபாய் வென்று இருந்த வர்ஷா கிரிக்கெட் தொடர்பான 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேள்விக்கு பதில் தெரியாததால் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
வர்ஷாவிடம்,அமிதாப்பச்சன் பின்வரும் இங்கிலாந்து கேப்டன்களில் இந்தியாவில் பிறக்காத கேப்டன் யார் என்ற கேள்வியை முன் வைத்தார். அதற்கு 4 பதில்களையும் அளித்து அவற்றில் ஒன்றை தேர்வு செய்ய கேட்டுக் கொண்டார். அவர் அளித்த நான்கு பதில்களில் நாசிர் ஹுசைன்,டக்ளஸ் ஜார்டின்,கொலின் கௌட்ரே மற்றும் டெட் டெக்ஸ்டர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. இந்தக் கேள்விக்கு போட்டியில் பங்கேற்ற வர்ஷாவிற்கு பதில் தெரியவில்லை. அதனால் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதன் மூலம் 25 லட்ச ரூபாய் வெல்வதற்கான வாய்ப்பையும் அவர் இழந்தார்.
இந்தக் கேள்விக்கு பெரும்பாலானவர்களுக்கு பதில் தெரிய வாய்ப்பில்லை. நாசிர் ஹுசைன் தவிர மற்ற மூன்று வீரர்களும் இந்தியாவில் பிறக்கவில்லை என்றுதான் பெரும்பாலானவர்கள் நினைப்பார்கள். ஆனால் இந்த கேள்விக்கான சரியான பதில் டெட் டெக்ஸ்டர். இவர் இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் பிறந்தவர்.1958 முதல் 1968 காலகட்டங்களில் இங்கிலாந்து அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவற்றில் 4502 ரன்கள் எடுத்ததோடு 66 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார். மேலும் இவரது தலைமையின் கீழ் இங்கிலாந்து அணி 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அவற்றில் ஒன்பது போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறது. 14 போட்டிகள் டிராவில் முடிவடைந்தன.
Cricket related question in KBC today pic.twitter.com/GpclOcV5c0
— Filtercricket (@filter_cricket) October 3, 2023
இவரை தவிர மற்ற மூன்று கேப்டன்களும் இந்தியாவில் பிறந்தவர்கள். நாசிர் உசேன் சென்னையில் பிறந்தவர். இவரது தலைமையில் இங்கிலாந்து அணி 17 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் 28 ஒரு நாள் போட்டிகளிலும் வென்றுள்ளது. மும்பையில் பிறந்த டக்ளஸ் ஜார்டின் இங்கிலாந்து அணிக்காக 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,296 ரன்கள் எடுத்திருக்கிறார். இவரது தலைமையில் இங்கிலாந்து அணி பத்து டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றியும் ஒரு தோல்வியும் பெற்று இருக்கிறது. மற்றொரு வீரரான கொலின் கௌட்ரே தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தவர். இவரது தலைமையின் கீழ் இங்கிலாந்து அணி எட்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றியும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது.