இந்திய அணி ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பையில் வெல்வது இவர் கையில் மட்டும் தான் இருக்கு.. முன்னாள் பயிற்சியாளர் பாராட்டு

0
108

இந்திய அணி அழுத்தத்தில் இருக்கும்போது தொடர்ந்து முன்னணியில் நின்று விளையாடியவர் ஹர்திக் பாண்டியா தான் என்று முன்னாள் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பாராட்டினார். வரும் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பைக்கான இந்தியாவின் 15 பேர் கொண்ட அணியில் ஹர்திக் பாண்டியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவின் திறன்களை அருகில் இருந்து கண்ட அபிஷேக் நாயர், ஹர்திக் ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரராக இருந்ததாக கூறினார். முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டரான நாயர், பாண்டியா மைதானத்தில் இருக்கும்போது ரசிகர்களுக்கு ஏதோ அற்புதம் நிகழலாம் என்ற நம்பிக்கையை அளிப்பதாகவும் கூறினார்.

- Advertisement -

ஹர்திக் மாதிரி யார் இருக்கா?

இது குறித்து பேசிய அவர், “இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் மதிப்புமிக்க வீரர் ஹர்திக் பாண்டியா தான். உலக கிரிக்கெட்டைப் பார்க்கும்போது, புதிய பந்தில் பந்து வீசி, இறுதி ஓவர்களில் பந்து வீசி, தொடர்ந்து நான்கு ஓவர்கள் வீசி, ஸ்பின் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தாக்கமான இன்னிங்ஸ் ஆடக்கூடிய வீரர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?”

“அவர் ஒரு முழுமையான ஆட்டத்தை மாற்றும் வீரராக இருக்கிறார்.எல்லாவற்றையும்விட, அவரது மிகப்பெரிய பலம் அவரது ஆளுமை. டிரஸ்ஸிங் ரூமிலோ அல்லது டக்அவுட்டிலோ இருக்கும்போது, அவர் மைதானத்தில் இருக்கும்போது ஏதோ அற்புதம் நிகழலாம் என்ற உறுதியை அவர் அளிக்கிறார்,” என்று அவர் கூறினார்.

- Advertisement -

தலைமை பண்பை கொண்டவர்:

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பாண்டியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று நாயர் கூறினார். ஹர்திக் பாண்டியா கேப்டனாக இல்லாவிட்டாலும் இந்திய அணிக்கு தலைமைப் பண்பை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டார்.
“நாம் தற்போதைய உலக சாம்பியன்களாக இருப்பதற்கு அவர் அழுத்தத்தில் வீசிய ஓவர்களும் ஒரு காரணம். பேட்டிங் மட்டுமல்ல, பந்து வீச்சிலும், கடினமான சூழ்நிலைகளில் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்”.

இதையும் படிங்க: ஆசிய கோப்பை இந்திய அணி.. திறமை இருந்தும் புறக்கணிக்கப்பட்ட 5 வீரர்கள்.. என்ன காரணம்? – முழு தகவல்கள்

“அவர் நிச்சயமாக அணிக்கு தலைமைப் பண்பை வழங்குகிறார். கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் எப்போதும் ஒரு தலைவராகவே இருப்பார். மேலும், ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமல்ல, அவரது ஆளுமையும், அணிக்கு அவர் கொண்டு வரும் தனித்துவமான பாணியும் இளம் வீரர்களுக்கு மிகவும் முக்கியமானவை” என்று அபிஷேக் நாயர் கூறினார்.

- Advertisement -