இந்திய அணி முதல் கோப்பையை வென்ற போது விளையாடியவரும் இந்திய முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலிப் வெங்சர்கர் பும்ரா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடியிருக்கக் கூடாது என விமர்சனம் செய்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதுகு பகுதியில் காயமடைந்த பும்ரா அதற்கு அடுத்து வந்த ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாடினார். இதற்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே காயத்தின் ஆபத்து காரணமாக விளையாடினார்.
அம்பானியிடம் பேசி இருப்பேன்
ஐபிஎல் தொடருக்கு அடுத்து வரலாற்று சிறப்புமிக்க 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்துக்கு எதிராக வரும்பொழுது, ஐபிஎல் தொடரில் பம்ராவை விளையாட வைத்தது தவறான முடிவு என்றும், இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திடம் பேசி புரிய வைத்திருக்க வேண்டும் எனவும் திலிப் வெங்சர்கர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது “நான் இந்திய அணியின் தலைமை தேர்வாளராக இருந்திருந்தால், இங்கிலாந்து தொடருக்காக பும்ரா ஐபிஎல் தொடரை தவறவிடுவது அல்லது ஐபிஎல் தொடரில் குறைந்த போட்டிகளில் விளையாடுவது தொடர்பாக முகேஷ் அம்பானியிடம் பேசி இருப்பேன். அவர்களும் இதற்கு சம்மதித்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்”
தேர்வாளர்கள் தவறவிட்டார்கள்
“இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆன டெஸ்ட் தொடரின் முக்கியத்துவத்தையும், பும்ராவுக்கு இருக்கும் முதுகு காயம் பற்றியும் கருத்தில் கொண்டு 2025 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரை விளையாட வேண்டாம் என அவரிடம் இந்திய தேர்வாளர்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். இப்படியான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடருக்கு அவரை நாம் முழு உடல் தகுதியில் வைத்திருப்பது அவசியம்”
இதையும் படிங்க : இந்திய டி20 அணிக்கு.. 2 கவலையான விஷயங்கள்.. ஆசிய கோப்பை இலங்கை பாகிஸ்தானுக்கா? – முழு விபரங்கள்
“சில நேரங்களில் பும்ரா போட்டிகளை தவற விட்டதற்காக நாம் அவரை குறை சொல்ல முடியாது. அவர் முதுகு பகுதியில் காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். மேலும் நாட்டிற்காக விளையாடும் பொழுது அவர் அனைத்தையும் கொடுத்திருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பை நாம் கேள்வி கேட்க முடியாது. மேலும் அவர் காயத்தின் பிரச்சினையில் இருந்து முழுமையாக திரும்பி வருவார்” என்று நம்புகிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.






