ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் தற்காலிக கேப்டன் வியான் முல்டர் ஆட்டமிழக்காமல் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த பிரைன் லாராவின் சாதனையை வியான் முல்டர் முறியடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவர் இந்த முடிவை எடுத்து இருக்கின்றார். இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இருக்கின்றது.
இந்த சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டி புல்வாயோ நகரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர் டோனி டிஸ்சோர்சி 10 ரன்களிலும், லெசிகோ 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தென்னாப்பிரிக்கா ரன் குவிப்பு:
மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் வியான் முல்டர் அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அவருக்கு துணையாக டேவிட் பெட்டிங்காம் 82 ரன்களும், 19 வயது வீரரான லுஹான் பிரிட்டோரியஸ் 78 ரன்களும் குவித்திருந்தனர். சிஎஸ்கே வீரர் பிரவீஸ் 35 பந்துகளின் 30 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்த சூழலில் தனி ஆளாக விளையாடிய முல்டர், ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்தார்.பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் பல சாதனைகளை உடைத்தார். முதல் சதத்தை 116 பந்துகளில் எதிர்கொண்ட அவர் இரண்டாவது சதத்தை 214 பந்துகளில் பூர்த்தி செய்தார். இதேபோன்று தன்னுடைய 250 ஆவது ரன்னை 243 பந்துகளில் எல்லாம் வியான் முல்டர் கடந்தார்.
வியான் முல்டர் முச்சதம்:
இந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதிலும் வியான் முல்டர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 297 பந்துகளை எதிர்கொண்ட அவர் தன்னுடைய முதல் முச்சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்று பெருமையை வியான் முல்டர் பெற்றார்.
இதையும் படிங்க: வலையை விரித்த வாசிங்டன் சுந்தர்.. பெரிய மீனை பிடித்த இந்திய அணி.. இங்கிலாந்து தடுமாற்றம்
தொடர்ந்து அதிரடியாக விளையாடியவர் ஒரு கட்டத்தில் 350 ரன்கள் கடந்தார். இது இரண்டாவது நாள் ஆட்டம் தான் என்பதால் இன்னும் அதிக நேரம் வியான் முல்டருக்கு இருந்தது. இதனால் லாராவின் 400 ரன்கள் ரெக்கார்டு அவர் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாருமே நினைக்காத வகையில் 367 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளர் செய்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 626 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ஆட்டம் இழக்காமல் இருந்த வியான் முல்டர் 334 பந்துகளில் 367 ரன்கள் சேர்த்தார். இதில் 49 பவுண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.






