இந்திய அணி தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கு அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது என்றும் இதற்கு சாக்குப் போக்கு சொல்ல முடியாது என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.
இந்திய அணிக்கு மூன்று வடிவத்திலும் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற பிறகு டெஸ்ட் வடிவத்தில் இந்திய அணி மிக மோசமாக செயல்பட்டு வருகிறது. முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமலும் போயிருக்கிறது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடரையும் இழந்தது.
நிறைய அழுத்தம் இருக்கிறது
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “கம்பீர் மீது நிறைய அழுத்தம் இருக்கிறது. அது அதிகரித்துக் கொண்டே வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பயிற்சியாளராக அவருடைய செயல் திறனை பார்த்தால் நிறைய போட்டிகளில் வெற்றி பெறவில்லை. இந்திய அணி தொடர் தோல்விகளை டெஸ்ட் வடிவத்தில் சந்தித்து வருகிறது”
“அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று இருக்கிறார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டியிலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டியிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு போட்டியிலும் தோல்வியடைந்து இருக்கிறார்”
சாக்குப் போக்கு சொல்ல முடியாது
“எனவே அவர் மீது நிறைய கேள்விகள் இருக்கும் என்று நினைக்கிறேன். இங்கிலாந்து டெஸ்ட் தொடரும் நல்ல முறையில் செல்ல வில்லை என்றால் கேள்விகள் எழும். இவர்கள் எங்கே செல்கிறார்கள்? இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்ற மாதிரியான கேள்விகள் உருவாகும்”
இதையும் படிங்க : ஜடேஜா ஆடவே கூடாது.. இந்த ரெண்டு மாற்றம் பண்ணுங்க.. இங்கிலாந்து அணி மண்ணை கவ்வும் – ஆஸி பிராட் ஹாக் பேட்டி
“ஏனென்றால் தேர்வுக் குழுவிடம் இவர்கள் என்ன கேட்கிறார்களோ அந்த மாதிரி அணி கொடுக்கப்படுகிறது. இவர்கள் விரும்பும் வகையிலான வீரர்களையும் தருகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது நல்ல முடிவுகளையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். இதே நிலை நீடித்தால் கம்பீர் எந்த சாக்குப் போக்கும் சொல்ல முடியாது. விஷயங்கள் மாற ஆரம்பித்து விடும்” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.






