தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை தென் ஆப்பிரிக்கா அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா மிகவும் உருக்கமாக பேசியிருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டுக்கு தென் ஆப்பிரிக்க அணி தடைக்காலத்திற்கு பிறகு 1992 ஆம் ஆண்டு திரும்பியது. தென் ஆப்பிரிக்க வரலாற்றில் ஐசிசி உலகக் கோப்பை எதையும் அந்த அணி வென்றது இல்லை. இந்த நிலையில் முதல் முறையாக டெம்பா பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் உலகக் கோப்பையை வென்று இருக்கிறது.
தென் ஆப்பிரிக்கா அணி மீதான விமர்சனம்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வலிமையானதாக கருதப்படுகிறது. இந்த அணிகள் தங்களுக்குள் மட்டும் மொத்தம் பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. கடுமையான போட்டியை சந்தித்து இந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு வருகின்றன.
அதே சமயத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் தென் ஆப்பிரிக்கா அணி மொத்தம் 12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக எந்த ஒரு டெஸ்ட் தொடரிலும் விளையாடவில்லை. இந்திய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. எனவே சாதாரண அணிகளை வென்று தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு வந்ததாக விமர்சனம் இருந்தது.
மனவேதனை ஏமாற்றம்
இந்த வெற்றி குறித்து பேசி உள்ள டெம்பா பவுமா ” கடந்த இரண்டு நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று நான் உணர்ந்தேன். நாங்கள் எங்களுடைய நாட்டில் இருந்தது போன்ற வரவேற்பும் உணர்வுமே இருந்தது. ஒரு அணியாக நாங்கள் இதைத்தான் விரும்பினோம். நாங்கள் தொடர்ந்து கதவை தட்டிக் கொண்டே இருந்தோம். மனவேதனை மற்றும் ஏமாற்றத்தை தாண்டி வந்தோம். கடந்த காலத்தில் விளையாடிய வீரர்களுக்கும் இதுவே இருந்தது. இன்று வெற்றி எங்கள் பக்கம் வந்திருக்கிறது”
இதையும் படிங்க : 27 வருடங்கள்.. 13 ICC நாக்-அவுட் போட்டிகள்.. தென் ஆப்பிரிக்கா சாம்பியன்.. ஆஸி ஏமாற்றம்.. WTC பைனல் 2025
“ரபாடா மகத்தான ஒரு வீரர். இன்னும் சில வருடங்களில் அவர் ஐசிசி ஹால் ஆப் ஃபேமில் இருப்பார். அவர் சர்ச்சையில் இருந்தாலும் கூட செய்ய வேண்டியதை செய்தார். மார்க்ரமுக்கு பெரிய புள்ளி விபரம் கிடையாது. ஆனால் அவரிடம் கேரக்டர் இருக்கிறது. அதை சிறப்பாக வெளிப்படுத்தினார். நாங்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறோம். அவர் எங்கள் அணியில் இன்னொரு மகத்தான வீரர். நாங்கள் இறுதிப் போட்டிக்கு வந்த விதம் குறித்து சந்தேகமும் விமர்சனங்களும் இருந்தது. பலவீனமான அணிகளை வீழ்த்தியதாக கூறப்பட்டது. இந்த வெற்றி அவர்களுக்கானது. சொந்த ஊரில் மக்கள் எங்களை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.






