இந்த ஆண்டு மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்வதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய விதியை கொண்டு வந்திருக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதட்டத்தின் காரணமாக ஐபிஎல் தொடர் நடுவில் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து பல வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்பி விட்டார்கள். அதில் சில வீரர்கள் மட்டுமே மீண்டும் ஐபிஎல் தொடருக்கு வருகிறார்கள்.
அணிகளுக்கு ஏற்பட்ட தலைவலி
ஐபிஎல் தொடர் பிளே ஆப் சுற்றில் ஆர்சிபி அணி பெரிய அளவில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த அணியில் உள்ள இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டி இருக்கிறது. இரு நாடுகளுமே தங்களுக்குள் ஒருநாள் தொடர் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுகின்ற காரணத்தினால், சில முக்கியமான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் பல அணிகள் பாதிக்கப்படுகின்றன.
பிசிசிஐ புதிய விதி
இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் தேவையான மாற்று வெளிநாட்டு வீரர்களை கொண்டு வருவதற்கு விதியை மாற்ற வேண்டிய தேவை இருந்தது. 10 அணிகளுமே புதிய வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஐபீஎல் 2025: சிஎஸ்கே கழற்றிவிட்ட வங்கதேச புலி.. கடைசி நேரத்தில் ஒப்பந்தம் செய்த டெல்லி அணி
இதனால் எந்த வெளிநாட்டு வீரர்களை வேண்டுமானாலும் ஐபிஎல் அணிகள் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று விதி திருத்தப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு தற்காலிகமாக ஒப்பந்தம் செய்யப்படும் வெளிநாட்டு வீரர்கள் யாரையும் அடுத்த வருடம் அப்படியே வைத்துக் கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு தற்காலிகமாக ஐபிஎல் தொடருக்கு வரும் வெளிநாட்டு வீரர்கள் அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் விதிகளை தளர்த்தி இருப்பது பத்து அணிகளையும் நிம்மதி பெரும் மூச்சு விட வைத்திருக்கிறது.






