நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 35வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி டெல்லி அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
டெல்லி குஜராத் மோதல்
அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி டெல்லி அணியின் இன்னிங்சை அபிஷேக் பொரேல் மற்றும் கருண் நாயர் ஆகியோர் தொடங்கினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 1.4 மூவர்களில் 23 ரன்கள் எடுத்த நிலையில் பொரேல் 9 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய கேஎல் ராகுல் கருண் நாயரோடு பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட, 18 பந்துகளில் 31 ரன்கள் குவித்த கருண் நாயர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
கே எல் ராகுல் 14 பந்துகளில் 28 ரன்கள், கேப்டன் அக்ஷார் பட்டேல் 32 பந்துகளில் 39 ரன்கள், ஸ்டெப்ஸ் 21 பந்துகளில் 31 ரன்கள், அசுதோஸ் சர்மா 19 பந்துகளில் 37 ரன்கள் என்று குவிக்க, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. குஜராத் அணியின் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா 4 விகெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி குஜராத் அணி களம் இறங்கியது.
குஜராத் டைட்டன்ஸ் அசத்தல் வெற்றி
இரண்டாம் பாதியில் பேட்டிங் செய்ய மேலும் சாதகமாக இருந்த நிலையில் இதனை குஜராத் வீரர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். இதில் அணியின் கேப்டன் சுப்மான் கில் 7 ரன்னில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினாலும் சாய் சுதர்சன உடன் ஜோடி சேர்ந்த ஜாஸ் பட்லர் டெல்லி அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். இதில் 21 பந்துகளில் 36 ரன்கள் குவித்த சாய் சுதர்சன் ஆட்டம் இழக்க ரூதெர்போர்ட் உடன் ஜோடி சேர்ந்த பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுவும் குறிப்பாக நட்சத்திர வீரர் ஸ்டார்க் ஒரே ஓவரில் 5 பௌன்டரிகள் தொடர்ச்சியாக அடித்து அசத்தினார்.
இதையும் படிங்க:GT vs DC.. ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்தியராக சாதனை படைத்த கேஎல் ராகுல்.. கெயில், ரசல் எலைட் லிஸ்ட்டில் இணைந்த முதல் இந்தியர்
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் அணியின் வெற்றிக்கு இறுதியில் 6 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட, ரூதர் போர்டு 34 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்து வெளியேற, ஸ்டார்க் ஓவரை எதிர்கொள்ள ராகுல் திவேட்டியா களம் இறங்கினார். 97 ரன்கள் குவித்ததோடு மறுமுனையில் பட்லர் நிற்க, ஸ்டார்கின் முதல் பந்தில் சிக்ஸர் மற்றும் இரண்டாவது பந்தில் பவுண்டரி என இரண்டு பந்துகளில் 10 ரன்கள் எடுத்து குஜராத் அணியை வெற்றி பெற வைத்தார். முதல்முறையாக குஜராத் அணி 200க்கும் அதிகமான ரன்கள் இலக்கை சேஸ் செய்து வரலாறு படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 54 பந்துகளை எதிர்கொண்ட பட்லர் 11 பவுண்டரி மற்றும் நான்கு சிக்சர் என 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். வெறும் 3 ரன்னில் அவரது சதம் பறிபோனது குறிப்பிடத்தக்கது.






