இன்று ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்ற விதம் குறித்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார். போட்டியின் ஆரம்பத்தில் வலிமையாக இருந்த குஜராத் அணியை கடைசி கட்டத்தில் சிறப்பாக மடக்கி லக்னோ அணி வென்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பில்லாமல் பத்து ஓவர்களுக்கு 100 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் மேற்கொண்டு அடுத்த பத்து ஓவர்களில் குஜராத் அணியால் 80 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி பத்து ஓவர்களில் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட லக்னோ அசத்தியது. பேட்டிங்கில் மார்க்ரம் மற்றும் பூரன் அதிரடியாக அரைசதங்கள் அடிக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ அணியின் சூப்பர் திட்டம்
இந்த முறை லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டின் நட்சத்திர வீரர்கள் மோசின் கான் மற்றும் மயங்க் யாதவ் இருவரும் காயத்தின் காரணமாக விளையாடவில்லை. இந்த நிலையில் லக்னோ தங்களது பேட்டிங் யூனிட்டை வலிமைப்படுத்தும் வேலையில் இறங்கி, ஐந்து இந்திய பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக் கொண்டது.
இதன் மூலம் தங்களது பந்துவீச்சாளர்களுக்கு தேவையான ரன்களை அதிரடியாக விளையாடி எடுத்தது. அத்துடன் தங்களிடம் இருக்கும் ஐந்து பந்துவீச்சாளர்களுக்கும் சரியான திட்டங்களை வகுத்துக் கொடுத்தது. இதன் மூலம் இந்த தொடரில் மிகவும் சுமாரான அணி என்று கணிக்கப்பட்ட லக்னோ அணி தற்பொழுது ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகள் பெற்று அசத்தியிருக்கிறது. ஆனால் சிஎஸ்கே அணி இரண்டு யூனிட்டையும் சரி செய்யப் போய் இரண்டையும் பலவீனம் ஆக்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எங்கள் திட்டம் இதுதான்
இந்த போட்டி குறித்து ரிஷப் பண்ட் பேசும்போது “நான் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாங்கள் எங்கள் பாதையில் பின் தொடர்ந்து செல்கிறோம். மேலும் நாங்கள் எங்களுடைய திட்டங்களை முழுமையாக நம்புகிறோம். அத்துடன் ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். கடைசியில் குஜராத்தை கட்டுப்படுத்துவதற்கு யார்க்கர் மற்றும் மெதுவான பந்துகளை கொண்டு வந்தோம். எங்கள் பந்துவீச்சாளர்கள் அதை சரியான முறையில் செய்து அவர்களை கட்டுப்படுத்தினார்கள்”
இதையும் படிங்க : வெறும் 34 பந்து.. தம்பி சாய் என்கிட்ட வச்சுக்காத.. பூரன் காட்டிய கெத்து.. உடனுக்குடன் பதிலடி
“பந்துவீச்சில் நாங்கள் ஆரம்பித்த விதம் நல்லபடியாக இல்லை. ஆனால் இரண்டாவது பகுதியில் நாங்கள் அவர்களை இழுத்துப் பிடித்த விதம் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது. மேலும் ஒவ்வொரு போட்டியிலும் நான் நன்றாக உணர்கிறேன். மேலும் விக்கெட்டில் நிறைய நேரம் இருப்பதை நான் விரும்புகிறேன். பூரன் பேட்டிங் செய்யும் விதம் அற்புதமாக இருக்கிறது. எந்த அணியிலும் அப்படி ஒரு வீரரை யாரும் விரும்புவார்கள்” என்று கூறியிருக்கிறார்.






