கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 21வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெறும் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஈடன் கார்டனில் ரன் மழை
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்களான ஷான் மார்ஸ் மற்றும் எய்டன் மார்கரம் ஆகியோர் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 62 பந்துகளில் 99 ரன்கள் குவித்தது.
28 பந்துகளில் 47 ரன்கள் குவித்த மார்க்ம் ஹர்ஷித்ரானா பந்துவீச்சில் வெளியேறினார். அதற்குப் பின்னர் மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய இன்ஃபார்ம் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரான் வழக்கம்போல தனது அதிரடியைத் தொடர்ந்தார். 36 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸ் என 87 ரன்கள் குவித்தார். மறுமுனையில் மிச்சல் மார்ஸ் 48 பந்துகளை எதிர்கொண்டு 81 ரன்கள் குவிக்க லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது.
4 ரன்னில் திரில் வெற்றி
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களம் இறங்கியது. டிகாக் 15 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரேன் தனது அதிரடி ஆட்டத்தை காண்பித்தார். மறுபுறம் ரகானே சுனில் நரேனோடு பார்ட்னர்ஷிப் அமைக்க இந்த ஜோடி 23 பந்துகளில் 54 ரன்கள் குவித்தது. இதில் 13 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட சுனில் நரேன் 30 ரன்னில் வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் கேப்டனோடு ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இதையும் படிங்க:ருதுராஜ் செய்யும் தப்புக்கு அவர் மட்டுமே காரணம் அல்ல.. சிஎஸ்கேவில் என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியும் – ஷேன் வாட்சன் பேட்டி
இருப்பினும் ரகானே 61 ரன்கள் மற்றும் வெங்கடேஷ் ஐயர் 45 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரவி பிஸ்னாய் ஓவரை எதிர்கொண்ட ரிங்கு சிங் அந்த ஓவரில் 19 ரன்கள் குவித்தார். முடிவில் கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. ரிங்கு சிங் 15 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். இரண்டு அணிகளும் சேர்த்து இந்த போட்டியில் மொத்தமாக 472 ரன்கள் குவித்திருக்கிறது என்பதை குறிப்பிடத்தக்கது.






