243 ரன்.. இம்பாக்ட் பிளேயரை வைத்து ட்விஸ்ட்.. குஜராத் அணிக்கு செக் வைத்த பாண்டிங் ஸ்ரேயாஸ் கூட்டணி.. 11 ரன்னில் பஞ்சாப் வெற்றி

0
485

பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் லீக் திருவிழாவின் ஐந்தாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.

இதில் சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

குஜராத் பஞ்சாப் மோதல்

குஜராத் அணிக்கு சொந்தமான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தது. இதன்படி பேட்டிங் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அறிமுகவீரர் ப்ரியன்ஸ் ஆர்யா சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். 23 பந்துகளை எதிர்கொண்டு 7 போர் மற்றும் 2 சிக்ஸ் என 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். அவருக்குப் பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தனது அதிரடியான ஆட்டத்தை விளையாட, மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் வரிசையாக நடையை கட்டினார்கள்.

அதற்குப் பின்னர் ஸ்ரேயாஸ் அய்யர் சசாங்க் சிங் உடன் ஜோடி சேர்ந்தார். இந்தக் கூட்டணி 28 பந்துகளில் 81 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 5 போர் மற்றும் 9 சிக்ஸ் என 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவரோடு ஜோடி சேர்ந்த சஷாங்க் சிங் 16 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 44 ரன்கள் குவித்தார். இதனால் பஞ்சாப் அணி இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட சாய் கிஷோர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

பஞ்சாப் அணி முதல் வெற்றி

இதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி குஜராத் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் சுப்மான் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவர்களில் 61 ரன்கள் குவித்தது. இதில் கேப்டன் கில் 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு பட்லர் உடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் அதிரடியாக விளையாடி 41 பந்துகளை எதிர் கொண்டு 74 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு குஜராத் அணியில் இம்பாக்ட் பிளேயராக ரூதர் போர்டு கொண்டுவரப்பட்டு தனது அதிரடியை தொடங்கினார்.

இதையும் படிங்க:வெறும் 3 ரன்.. ஆனா ஸ்ரேயாஸ் ஐயரை நான் சதம் அடிக்க விடல.. அதற்குக் காரணமே இதுதான் – ஷஷாங்க் சிங் பேட்டி

அந்த நேரத்தில் துரிதமாக செயல்பட்ட பஞ்சாப் அணி பதினைந்தாவது ஓவரில் இம்பாக்ட் பிளேயராக வைசாக் விஜயகுமாரை உள்ளே கொண்டு வந்தது. ரூதர் போர்டுக்கு ஆப்சைடு பந்துகளை ஒரே இடத்தில் வீசவைத்து அவரை அடிக்க முடியாமல் தடுத்து நிறுத்தியது. 28 பந்துகளை எதிர்கொண்ட ரூதர் போர்டு 46 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பாண்டிங் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான தலைமைத்துவ குணத்தால் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. குஜராத் அணி இந்த போட்டியில் 16 சிக்ஸர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் சாதனையை பதிவு செய்தது.

- Advertisement -