13 ஓவரே போதும்.. மாஸ் காட்டிய நியூசிலாந்து.. மீண்டும் பாகிஸ்தான் அணி படுதோல்வி.. தொடரை இழக்கும் நிலை

0
458
Pakistan

தற்போது பாகிஸ்தான் இளம் டி20 அணி நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மீண்டும் 5 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஏற்பட்ட படுதோல்வியின் காரணமாக, சல்மான் அலி ஆகா தலைமையில் புதிய பாகிஸ்தான் டி20 அணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணி தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்த தொடரின் முதல் போட்டியில் 91 ரன்னில் சுருண்டு தோற்று இருந்தது.

- Advertisement -

கேப்டன் மட்டுமே தாக்குப்பிடித்த இன்னிங்ஸ்

இந்த நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் துவக்க ஆட்டக்காரர்கள் முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் இந்த முறையும் ஏமாற்றம் தந்து வெளியேறினார்கள். இர்பான் கான், குஸ்டில் ஷா என அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் பாகிஸ்தான் அணி மீண்டும் 100 ரன்னுக்கு கீழ் சுருளும் ஆபத்து உருவானது.

இப்படியான சூழ்நிலையில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா 28 பந்தில் 46 ரன்கள், ஆல் ரவுண்டர் சதாப்கான் 14 பந்தில் 26 ரன்கள், கடைசியில் வந்த ஷாஹீன் அப்ரிடி ஆட்டம் இழக்காமல் 14 பந்தில் 22 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து பந்துவீச்சில் ஜேக்கப் டப்பி, இஸ் சோதி மற்றும் பென் சீர்ஸ் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

நியூசிலாந்து அசத்தல் வெற்றி

இதைத்தொடர்ந்து சிறிய இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் டிம் செப்பர்ட் 22 பந்தில் 45 ரன்கள், பின் ஆலன் 16 பந்தில் 38 ரன்கள் என அதிரடியாக எடுத்து முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தார்கள். இந்த இடத்திலேயே நியூசிலாந்து அணியின் வெற்றி உறுதி ஆகிவிட்டது.

இதையும் படிங்க : நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல.. இனி என் நோக்கம் இது மட்டும்தான் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

இதற்கு அடுத்து நியூசிலாந்து அணிக்கு டேரில் மிட்சல் 14 பந்தில் 14 ரன்கள், மிட்சல் ஹே ஆட்டம் இழக்காமல் 16 பந்தில் 21 ரன்கள் எடுக்க, அந்த அணி 13.1 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஹாரிஸ் ரவுப் மட்டுமே இரண்டு விக்கெட் கைப்பற்றினார். அடுத்த போட்டியையும் தோற்றால் பாகிஸ்தான் தொடரை இழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -