ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரராக திகழ்ந்த டேவிட் வார்னர், சில மாதங்களுக்கு முன்பாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முக்கிய தொடராக கருதப்படும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் குறித்து வார்னர் சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.
ஆஷஸ் டெஸ்ட் தொடர்
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே புகழ்மிக்க டெஸ்ட் தொடராக கருதப்படும் ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர், இன்னும் எட்டு மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் கைகளே அதிகமாக ஓங்கி இருக்கிறது. இருப்பினும் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் சமீப காலமாக பயன்படுத்தி வரும் பாஸ் பால் அணுகுமுறை இங்கிலாந்து அணிக்கு குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது.
ஆனால் அது ஆசிய கண்டத்தில் அவ்வளவாக கை கொடுக்கவில்லை. இந்திய அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, அதற்குப் பின்னர் தற்போது நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் சுற்றோடு வெளியேறியது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ஆசஸ் டெஸ்ட் தொடர் குறித்து சில முக்கிய கருத்துக்கள் கூறியிருக்கிறார்.
எங்கள் அணியிடம் பார்த்ததில்லை
இதுகுறித்து அவ்வாறு விரிவாக கூறும்போது “பாஸ் பால் அணுகுமுறை இப்போது ஒரு கட்டுக்கதையா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அது ஆஸ்திரேலியாவில் நடைபெறுவது என்னால் பார்க்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் பவுன்ஸ் மைதானங்கள் மற்றும் அதன் கள சூழ்நிலைகள் மற்றும் இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா விளையாடிய போதும் அவர்களின் அணுகுமுறையை நான் பார்க்கவில்லை.
இதையும் படிங்க:அடிச்சு சொல்றேன்.. ஸ்ரேயாஸ் ஐயருக்கு அந்த வலி போகல.. பஞ்சாப் அணிக்கு மாஸ் பண்ண போறாரு – ஆகாஷ் சோப்ரா
ஆனால் இங்கிலாந்து அணி அந்த அணுகுமுறையை ஆஸ்திரேலியாவில் விளையாடுவது மிகவும் ஆபத்தானது என்று நினைக்கிறேன். ஆடுகளத்தின் விக்கெட்டுகள் தேய்ந்து போவதாக இருந்தால் ஆட்டம் நான்காவது நாள் மற்றும் ஐந்தாவது நாளுக்குச் செல்லும். ஆனால் அவர்கள் பாஸ் பால் அணுகு முறையை பின்பற்றுவதாக இருந்தால், அது அதிக வேகம் மற்றும் அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கும். அதனால் போட்டியின் முடிவில் கடைசி இரண்டு நாட்கள் நாம் விடுமுறையில் இருப்போம் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். அதாவது அவர்களின் விரைவான அணுகுமுறையால் இங்கிலாந்து விரைவாக ஆட்டம் இழந்து மூன்று நாட்களில் போட்டி முடிந்து விடும் என்று கூறியிருக்கிறார்.






