தென் ஆப்பிரிக்காவில் நேற்று நடைபெற்ற எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் எலிமினேட்டர் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணிகள் மோதின.
இதில் சிறப்பாக விளையாடிய சன்ரைசர்ஸ் அணி சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிபயர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக்
செஞ்சுரியனில் நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணி முதல் விக்கெட்டுக்கு 3.2 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் பெடிங்காம் 14 பந்துகளில் 27 ரன்கள் குவித்து வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டோனி டி ஜார்ஜி 14 ரன்னில் வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கியவர்களில் ஹெர்மன் 12 ரன் மற்றும் அபெல் 10 ரன்னில் வெளியேறினார்கள்.
அதற்குப் பிறகு கேப்டன் மார்க்ரம் அணியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 40 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 62 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். விக்கெட் கீப்பர் ஸ்டெப்ஸ் 26 ரன் மற்றும் மார்க்கோ ஜான்சன் 23 ரன் என தனது பங்குக்கு விளையாட சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது.
சூப்பர் கிங்ஸ் ஏமாற்றம்
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் டூப்ளஸ்சிஸ் இந்த முறை எதிர்பாராத விதமாக 18 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் 19 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே 30 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய ஜேபி கிங் 9 ரன், லுப்பெ 18 பந்துகளில் 13 ரன் என மிகவும் மெதுவாக விளையாடினார்கள்.
இதையும் படிங்க:கேஎல் ராகுலா? ரிஷப் பண்டா? என் சாய்ஸ் இப்போ இவர்தான்.. டீமுக்காக எல்லாமே செய்றாரு – ரோஹித் சர்மா பேட்டி
அதற்குப் பின்னர் களம் இறங்கிய பேர்ஸ்டோ 17 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 37 ரன்கள் குவித்தார். மொயின் அலி நான்கு பந்துகளில் டக் அவுட் ஆகி வெளியேற ஜோன்ஸ் 17 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இருப்பினும் பந்துகள் மீதம் இல்லாததால் சூப்பர் கிங்ஸ் அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சூப்பர் கிங்ஸ் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது முறையாக சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோப்பையை வெல்லும் வாய்ப்பு தகர்ந்தது.






