ஐசிசி மூன்றாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளை நடத்தி வருகிறது. அடுத்த சைக்கிளுக்கு புதிய விதிமுறையை உருவாக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா என மூன்று நாடுகள் மட்டுமே அதிக போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் பல அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதும் இல்லை. எனவே இதில் சரிசமமான போட்டித் தன்மையை உருவாக்க மாற்றங்கள் ஏற்பட இருப்பதாக செய்திகள் கூறுகிறது.
தென் ஆப்பிரிக்காவால் வந்த சிக்கல்
இந்த முறை தென் ஆப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி மொத்தம் ஆறு தொடர்களில் 12 போட்டிகளில் மட்டுமே விளையாடி இந்த நிலையை அடைந்திருக்கிறது. மேலும் தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு டெஸ்ட் தொடரில் கூட விளையாடவில்லை. அந்த அணி விளையாடிய 6 டெஸ்ட் தொடர்களும் இரண்டு போட்டிகள் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களுக்குள் மட்டுமே மொத்தம் பத்து போட்டிகளில் விளையாடி இருக்கின்றன. இந்த மூன்று அணிகளும் தங்களுக்குள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இறுதிப் போட்டிக்கு நியாயமான முறையில் அணிகளை கொண்டு வர ஐசிசி திட்டமிட்டு இருக்கிறது.
இரட்டை அடுக்கு முறை
தற்போது உலக டெஸ்ட் நாடுகளில் முதல் 9 இடங்களில் இருக்கும் அணிகளை ஒரு பிரிவாகவும், மற்ற நாடுகளை இன்னொரு பிரிவாகவும் வைத்து போட்டி அட்டவணைகள் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் முதல் 9 இடங்களில் இருக்கும் அணிகளில் யார் கடைசி இடத்தை பிடிக்கிறார்களோ அவர்கள் இரண்டாவது அடுக்குக்கு செல்வார்கள் எனவும், இரண்டாவது அடுக்கில் முதல் இடத்தை பிடிக்கும் அணி முதல் அடுக்குக்கு வருவார்கள் என்றும் தெரிகிறது.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் பெரிய ரிஸ்க் எடுக்கிறார்.. இதுக்காகவே கம்பீர் இதை செய்யணும் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வேண்டுகோள்
ஐசிசி தலைவர் ஜெய் ஷா தலைமையில் இதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் முடிவடைந்ததும், இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்த இரட்டை அடுக்கு முறை அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.






