இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.
தற்போது இலங்கை அணி வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடுவதற்கு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என இலங்கை இழந்தது. இந்த நிலையில் அடுத்த துவங்கிய மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தது.
மழையால் ஓவர்கள் குறைப்பு
இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களில் வில் யங் 18 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, இன்னொரு துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா 63 பந்தில் ஒன்பது பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் உடன் 79 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து சாப்மேன் 52 பந்தில் 62 ரன்கள், டேரில் மிட்சல் 38 பந்தில் 38 ரன்கள் எடுத்தார்கள். நியூசிலாந்தின் நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு அதிரடியாக 255 ரன்கள் குவித்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளர் தீக்ஷனா நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
மோசமாக விழுந்த இலங்கை அணி
இதைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை பதும் நிஷாங்கா 1, அவிஷ்கா பெர்னாடோ 10, குஷால் மெண்டிஸ் 2, கேப்டன் சரித் அசலங்கா 4, ஜனித் லியாங்கே 22, விக்கிரமசிங்கே 17, ஹசரங்கா 1 ரன் என சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். இதனால் இலங்கை அணியின் தோல்வி ஆரம்பத்திலேயே உறுதியானதாக மாறியது.
இதையும் படிங்க : கம்பீர் போட்ட உத்தரவு.. உடனடியாக நிதீஷ் குமார் கொடுத்த அறிவிப்பு.. இந்திய கிரிக்கெட்டில் உடனடி மாற்றம்
இதைத் தொடர்ந்து நிலைத்து விளையாடிய கமிந்து மெண்டிஸ் மட்டும் அரைசதம் அடித்து 66 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். முடிவில் இலங்கை அணி 30.2 ஓவரில் 142 ரன்கள் எடுத்துச் சுருண்டது. நியூசிலாந்து பந்துவீச்சில் வில்லியம் ஓ ரூர்க் 3, ஜேக்கப் டஃபி 2 விக்கெட் கைப்பற்றினார்கள். நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரையும் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.






