ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நகர்வுகள் மிகவும் மோசமானதாக இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ரவி சாஸ்திரி மற்றும் சுனில் கவாஸ்கர் இருவரும் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா அணி நேற்று 299 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் இன்று தொடர்ந்து விளையாடி அந்த அணி 474 ரன்கள் குவித்தது. ஸ்மித் 140 ரன் எடுக்க, கம்மின்ஸ் 49 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய கடைசி கட்ட விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த இந்திய கேப்டன் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்று ரசிகர்கள் வரை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
சிராஜை வைத்து ஆரம்பித்த ரோஹித் சர்மா
இன்று போட்டியின் முதல் ஓவரையே முகமது சிராஜை வைத்து கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பித்தது விமர்சனமாக இருக்கிறது. நேற்று புதிய பந்தில் ஆகாஷ் தீப் விக்கெட் எடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து கொண்டு வந்து பயன்படுத்தவில்லை பும்ராவையும் முதலில் கொண்டு வரவில்லை. மேலும் நேற்று 40 ஓவர்கள் தாண்டியே வாஷிங்டன் சுந்தரை கொண்டு வந்தார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறும்பொழுது ” இந்திய அணியில் இருக்கும் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களையும் 40 ஓவர்களுக்கு பிறகு எதற்காக கொண்டு வந்தீர்கள். மெல்போனில் நீங்கள் முதல் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்தில் இதை செய்யலாம். இன்று சிராஜை வைத்து ஆரம்பித்ததற்கு பதிலாக பும்ராவை வைத்து ஆரம்பித்திருக்கலாம். சிராஜுக்கு நம்பிக்கை குறைவாக இருப்பதால் அவரை சரியாக பயன்படுத்துவது முக்கியம்”
ரோஹித் இதையாவது செய்யுங்கள்
இந்த நிலையில் ரோஹித் சர்மா கேப்டன்சி பற்றி பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” இப்பொழுது மிட்சல் ஸ்டார்க் பேட்டிங் செய்ய வந்திருக்கிறார். உங்களுடைய நேராக இருக்கும் பீல்டர்கள் இருவரும் மேலே இருக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்களில் ஒருவரையாவது உள்ளே கொண்டு வர வேண்டும்”
இதையும் படிங்க : இந்திய வீரர்கள் கைகளில் கருப்பு பேட்ஜ்.. அணிய காரணம் என்ன? ஆஸி 4வது டெஸ்ட்.. முழு விபரம்
“இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சுமாராக இருக்கிறார்கள். ஒரு பவுன்சர் வீச வேண்டும் என்றால் அது ஹெல்மெட்டுக்கு இருக்க வேண்டும். ஆனால் ஆகாஷ் தீப் இடுப்புக்கு வீசுகிறார். இப்படி செய்து அவர் புதிய பந்தை நிறைய வீணடித்து விட்டார். ஒட்டுமொத்தமாக இவர்களின் பந்துவீச்சு செயல்பாடு மிகவும் சுமாராக இருக்கிறது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.






