இந்திய டெஸ்ட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பண்ட் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் சற்று தடுமாறி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் பண்ட் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட்
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையேயான நான்காவது போட்டி வருகிற 26ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடிய பண்ட் சற்று தடுமாறி வருகிறார்.
அதாவது ஆடுகளத்திற்கு உள்ளே வரும்போது பந்துவீச்சாளர் மற்றும் ஆடுகளத்தின் தன்மையை கணிக்காமல் அதிரடியாக விளையாட சென்று ஆட்டம் இழக்கிறார் என்று அவர் மீது சில குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் பண்ட் முதல் அரை மணி நேரத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம் எனவும், பின்னர் ஆடுகளத்தின் சூழ்நிலையை உணர்ந்து பின்னர் விளையாடலாம் என்று கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
முதல் அரை மணி நேரம் அவசியம்
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ரிஷப் பண்ட் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால் எல்லோரையும் போல முதல் அரை மணி நேரத்தை மதிக்க வேண்டும். ஆடுகளத்தையும் பந்துவீச்சாளரையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அணி எந்த நிலையில் இருந்தாலும் அவர் உள்ளே வரும்போது சூழ்நிலைக்கு சிறிய மரியாதை கொடுக்க வேண்டும். ஒருவேளை இந்திய அணி மூன்று விக்கட்டுக்கு 525 ரன்கள் குவித்து இருந்தால் அவர் வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தை விளையாடலாம்.
இதையும் படிங்க:2025 சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை அறிவிப்பு.. 2 பிரிவுகள்.. இந்திய அணி போட்டிகள் – மொத்த விபரங்கள்
ஆஸ்திரேலியா வீரர்கள் பந்தின் கோணத்தை மாற்றி வீசுகிறார்கள். கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் ஜோடி பண்ட்டுக்கு சிறிய பிரச்சனை கொடுக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்லாமல் ஸ்காட் போலன்டும் பண்டிற்கு பிரச்சனையை ஏற்படுத்தக் கூடிய வீரராக இருக்கிறார். ஏனென்றால் போலண்ட் பந்தின் கோணத்தை மாற்றி சிறப்பாக வீசுகிறார்” என்று அவர் கூறியிருக்கிறார். எனவே இந்திய அணி நான்காவது போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் ஆஸ்திரேலியா வீரர்களின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம்.






