ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.
இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரஷீத் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஆப்கானிஸ்தான் ஜிம்பாப்வே மூன்றாவது டி20 போட்டி
ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் இரண்டு டி20 போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்றன. இந்த சூழ்நிலையில் தொடரை நிர்ணயிக்கப் போகும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் பேட்ஸ் செய்த ஜிப்பாப்வே அணி ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதில் சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கான் நான்கு ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் ஜிம்பாப்வே அணியின் இறுதிக்கட்ட ரன் வேகம் அப்படியே சரிந்தது. ஜிம்பாப்வே அணியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பென்னட் 31 ரன்கள் குவித்தார். இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது.
ரஷித் கான் அபார பந்துவீச்சு
பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜிம்பாப்வே அணி ஆப்கானிஸ்தான் அணியின் முதல் நான்கு விக்கெட்டுகளையும் வேகமாக வீழ்த்தியது. இருப்பினும் அஸ்மதுல்லா ஆட்டத்தின் நிலையை உணர்ந்து ஓரளவு பொறுப்பாக விளையாடினார். 37 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் மூன்று பௌண்டரிகள் அடித்து 34 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 19.3 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் குவித்து மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க:10 ஃபோர்ஸ்.. 2 சிக்ஸ்.. டிராவிட்டின் இளைய மகனும் அசத்தல் சதம்.. 441 ரன்கள் குவித்த கர்நாடக அணி
இதில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் உதவிய ரஷித் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஏற்கனவே இரண்டாவது டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த ஆப்கானிஸ்தான் அணி தற்போது மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற தொடரை கைப்பற்றியது. டி20 தொடர் தற்போது முடிவடைந்திருக்கும் நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி வருகிற 17-ஆம் தேதி முதல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.






